உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனிடையே உன்னாவ் பாலியல் வன்கொடுமையை கண்டித்து காங்கிரஸ் எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, தீவைத்து எரிக்கப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உத்தரப் பிரதேசத்தில் போராட்டங்கள் அதிகரித்துள்ளன.
இதனிடையே, உன்னாவ் பாலியல் வன்கொடுமை விவகாரத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் எழுப்பினர். அப்போது பேசிய காங்கிரஸ் மக்களவைக் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் நிலையில், சீதைகள் உயிரோடு கொளுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இதற்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
உன்னாவ் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண், சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார். டெல்லியில் உள்ள Safdarjung மருத்துவமனையில் அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் 90 விழுக்காடு தீக்காயங்கள் உள்ளதாகவும், செயற்கை சுவாச உதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சுனில் குப்தா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் சுனில் குப்தா கூறியுள்ளார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.