மேற்குவங்கத்தில் ராகுல்காந்தி பரப்புரை செய்த 2 தொகுதிகளிலும் டெப்பாசிட் இழந்தது காங்கிரஸ்... 3வது அணி படுதோல்வி..

ராகுல் காந்தி

மேற்குவங்கத்தில் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சி 2.94% வாக்குகளையே பெற்றுள்ளது.

  • Share this:
மேற்குவங்கத்தில் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிக்கு கிடைத்த மரண அடியின் மூலம் அங்கு 3வது அணி என்ற பேச்சுக்கே வேலையில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸும், பாஜகவும் தனியாக களம் கண்ட போதிலும் ஒரு காலத்தில் மாநிலத்தில் ஆட்சி நடத்திய கட்சிகளாக காங்கிரஸும், இடதுசாரிகளும் இந்த முறை ஒரே கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன. இருப்பினும் தேர்தல் முடிவில் இரு கட்சிகளுக்குமே பலத்த அடியே கிடைத்திருக்கிறது.

மேற்குவங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 2 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது முடிவுகள் தெரிந்த 292 தொகுதிகளில் 214 தொகுதிகளில் வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. கடந்த முறை 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 76 தொகுதிகளை கைப்பற்றி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

இவ்விரு கட்சிகளுக்கும் மாற்றாக உருவாக்கப்பட்ட காங்கிரஸ், இடதுசாரிகள், ISF போன்ற கட்சிகளை உள்ளடக்கிய 3வது அணியால் வெறும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது.

இதில் மிகவும் பரிதாபக்குரியதாக மாறியிருப்பது காங்கிரஸ் கட்சி தான். கடந்த தேர்தலில் 44 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு இந்த முறை ஜீரோ தான். இடதுசாரி கூட்டணியில் 90 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்களில் மட்டுமே டெப்பாசிட் கிடைத்துள்ளது. எஞ்சிய 79 தொகுதிகளில் டெப்பாசிட்டை பறிகொடுத்திருக்கிறது. Joypur மற்றும் Raninagar ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் தான் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 2ம் இடம் பிடித்தது.


ராகுல் காந்தி


இதில் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவெனில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்ட Matigara-Naxalbari மற்றும் Goalpokhar என இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் டெப்பாசிட் இழந்தது. இதில் Matigara-Naxalbari தொகுதியினை காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகளாக வெற்றி பெற்று வசப்படுத்தியிருந்தது. தற்போது அங்கு போட்டியிட்ட சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு 3ம் இடம் தான் கிடைத்துள்ளது. அங்கு காங்கிரஸுக்கு 9% வாக்குகளே கிடைத்தன, Goalpokhar தொகுதியில் 12% வாக்குகள் கிடைத்தன.

மேற்குவங்கத்தில் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சி 2.94% வாக்குகளையே பெற்றுள்ளது.

இடதுசாரிகளை பொறுத்தவரையில் அவர்கள் 5% வாக்குகளை பெற்றுள்ளனர். அக்கட்சியினர் போட்டியிட்ட 170 தொகுதிகளில் 21-ல் மட்டுமே டெப்பாசிட்டை தக்க வைத்துள்ளனர்.

3வது அணியிலேயே ஓரளவு சுமாரான தோல்வியை பெற்றது இஸ்லாமிய தலைவர் அப்பாஸ் சித்திகியின் ஐஎஸ்ஃஎப் கட்சி மட்டுமே. 3வது அணிக்கு கிடைத்த ஒரே தொகுதியும் ஐஎஸ்ஃஎப் கட்சி பெற்றதே.

இடதுசாரி கூட்டணி


ஒட்டுமொத்தமாக 3வது அணி 42 தொகுதிகளில் மட்டுமே டெப்பாசிட்டை தக்க வைத்திருக்கிறது. 85% தொகுதிகளில் டெப்பாசிட்டை இழந்திருக்கிறது. 3வது அணியான காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் வாக்குகளை இந்த முறை மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறுவடை செய்திருக்கிறது.
Published by:Arun
First published: