மேற்குவங்கத்தில்
காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மேற்கு வங்க மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில்
குற்றம்சாட்டப்பட்ட நிறுவனம் சார்பில் ப சிதம்பரம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவருக்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு வங்க பால்வளத்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் மெட்ரோ டைரி நிறுவனத்தின் பங்குகளை அம்மாநில அரசு தனியார் பால்நிறுவனம் ஒன்றுக்கு விற்பதை எதிர்த்து மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் சௌத்ரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு மூலம் காங்கிரஸ் கட்சி மேற்குவங்க அரசை கடுமையாக குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியால் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நிறுவனத்துக்கு ஆதரவாக வாதாட கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜரானார்.
இதற்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். வழக்கில் ஆஜராக வந்த ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவருக்கு எதிராக கருப்பு ரிப்பன் காட்டி, டிஎம்சி ஆதரவாளர் சிதம்பரம் என கோஷம் எழுப்பினர்.
மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரசின் நிலை மோசமாக ப.சிதம்பரம் தான் காரணம் எனவும் கோஷம் எழுப்பினர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து கொண்டு எப்படி இந்த வழக்கில்ஆஜராக முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், கொல்கத்தா நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிரான போராட்டம் பற்றி அறிந்தேன். இது காங்கிரஸ் தொண்டர்களால் தன்னிச்சையாக நடந்த போராட்டமே.
தொழில் போட்டி நிறைந்த உலகம் இது. இதனால் ஒவ்வொருவருக்கும் தங்களது தொழில் சார்ந்த முடிவுகளை விருப்பத்தின் அடிப்படையில் மேற்கொள்ள உரிமை உண்டு. அது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். இந்த வழக்கில் ஆஜராக வேண்டும், வேண்டாம் என்று யாரும் அவருக்கு உத்தரவிட முடியாது என்று அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.