ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? - இன்று தேர்தல் - கர்நாடகாவில் வாக்களிக்கிறார் ராகுல்!

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? - இன்று தேர்தல் - கர்நாடகாவில் வாக்களிக்கிறார் ராகுல்!

காங்கிரஸ் தேர்தல்

காங்கிரஸ் தேர்தல்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து காந்தி குடும்பம் விலகுவதாக கூறியுள்ள நிலையில், தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி), காங்கிரஸ் செயற்குழு (CWC), பிரதேச காங்கிரஸ் கமிட்டி (PCC), மாவட்ட மற்றும் தொகுதி காங்கிரஸ் கமிட்டி என குழுக்கள் வாரியாக அமைக்கப்பட்டதுதான் காங்கிரஸ் கட்சி.

  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் சுமார் 1500 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் காங்கிரஸ் செயற்குழுவின் (CWC) 24 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

  இந்தியா முழுவதும் மொத்தம் 30- க்கும் மேற்பட்ட பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் உள்ளன. கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்க சுமார் 9,100க்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்த முறை வாக்களிக்க உள்ளனர்.

  சசிதரூர் - கார்கே

  காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 67 வாக்குச்சாவடிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேச ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ள ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வாக்களிக்க கர்நாடகாவில் சிறப்பு முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.

  மேலும் டெல்லியில் தங்கியுள்ள கட்சியின் மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மாநில காங்கிரஸ் குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகள் வாக்களிப்பதற்காக சிறப்பு வாக்குச் சாவடி காங்கிரஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் சத்தியமூர்த்தி பவனிலும் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வாக்களிக்க தகுதியுள்ள 710 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட வாரியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

  சசிதரூர் Vs கார்கே: காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் ரேஸில் முந்துவது யார்?

  ரகசிய முறையில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இருவர் மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் வாக்காளர்கள் யாராவது ஒருவருடைய பெயரை எழுதி அல்லது டிக் செய்து வாக்குப்பெட்டியில் போட வேண்டும்.

  வாக்குப்பதிவு முடிந்த பிறகு அனைத்து வாக்குப் பெட்டிகளும் டெல்லி தலைமை அலுவலகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு, அக்டோபர் 19 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. குறிப்பிட்ட மாநிலத்தில் எந்த வேட்பாளர் எவ்வளவு வாக்குகள் பெற்றார் என்பதை அறியாத வகையில், அனைத்து மாநிலங்களின் வாக்குச் சீட்டுகளும் ஒட்டுமொத்தமாக கலக்கப்பட்டு, அதன்பின் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

  Published by:Lakshmanan G
  First published: