கொரோனா பாதிப்பால் மேலும் ஒரு காங்கிரஸ் வேட்பாளர் மரணம்!

கோப்புப்படம்

மேற்குவங்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  • Share this:
மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் முன்னதாகவே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை உச்சம் பெற்றுள்ளதற்கு மத்தியில் 5 மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று வருகிறது. தமிழகம், கேரளா, அசாம் மற்றும் புதுவையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்ட நிலையில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் மேற்குவங்கத்தில், இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவு மிச்சம் உள்ளது.

இதற்கிடையே மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சம்சேர்காஞ்ச் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரான ரெசால் ஹாக், கொரோனா தொற்றுக்காக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரெசால் ஹாக்கிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார், ஆனால் நேற்றிரவு அவரின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் இன்று காலை 5 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காங்கிரஸ் வேட்பாளரான ரெசால் ஹாக்


சம்சேர்காஞ்ச் சட்டமன்ற தொகுதியில் 7ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவானது ஏப்ரல் 26ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்னதாகவே வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்திருப்பது மேற்குவங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெறும் முன்னதாகவே வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்திருப்பதாக் அந்தத் தொகுதியில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

முன்னதாக தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா தொற்றுக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். தற்போது மேலும் ஒரு காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதே போல பல மாநிலங்களிலும் வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரன் (வயது 51) மற்றும் கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி கட்சியான மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிசிச்சையில் உள்ளனர்.
Published by:Arun
First published: