• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மத்திய அமைச்சர் கைது: குடியரசுத் தலைவரைச் சந்திக்க முயலும் காங்கிரஸ்- லக்கிம்பூர் விவசாயிகள் கொலையின் நகர்வுகள்

மத்திய அமைச்சர் கைது: குடியரசுத் தலைவரைச் சந்திக்க முயலும் காங்கிரஸ்- லக்கிம்பூர் விவசாயிகள் கொலையின் நகர்வுகள்

லக்கிம்பூர் நிகழ்வு

லக்கிம்பூர் நிகழ்வு

லக்கிம்பூர் விவசாயிகள் கொலை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்க காங்கிரஸ் நேரம் கோரியுள்ளது.

  • Share this:
    உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் குறித்து எடுத்துரைக்க நேரம் ஒதுக்குமாறு குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் திங்கட்கிழமை மனுத் தாக்கல் செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளது.

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.

    காரை மோதச் செய்ததாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக காவல்துறை இரு முறை சம்மன் அனுப்பிய நிலையில் காவல் துறை முன் ஆஷிஷ் மிஸ்ரா சனிக்கிழமை ஆஜரானார்.

    12 மணிநேரம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, அவரை போலீஸார் கைதுசெய்தனர். விசாரணையின்போது, ஆஷிஷ் மிஸ்ரா போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், சில கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் டிஐஜி உபேந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, லக்கிம்பூர் கெரி நீதிமன்றத்தில் திங்கட்கிழமை மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, லக்கிம்பூர் கெரி விவகாரம் குறித்து எடுத்துரைப்பதற்கு அனுமதிகோரி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 7 பேர் குழு சந்திக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை படுகொலை செய்தது அதிர்ச்சி அளிப்பதாகவும், ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாரணாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, 4 விவசாயிகளை மத்திய அமைச்சரின் மகன் கார் ஏற்றிக் கொன்ற நிலையில், மத்திய அமைச்சரையும், அவரது மகனையும் முதலமைச்சர் பாதுகாத்து வருவதாக குற்றம்சாட்டினார். உலகம் முழுவதிலும் சுற்றிவரும் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளை சந்திப்பதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

    லக்கிம்பூர் சம்பவத்தைக் கண்டித்து, மகாராஷ்டிராவில் மாநில அளவிலான முழுஅடைப்பை திங்கட்கிழமை நடத்த ஆளும் மகாராஷ்டிரா விகாஷ் அகாடி கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: