West Bengal Result | மேற்குவங்கத்தில் இடதுசாரிகள், காங்கிரஸுக்கு பூஜ்ஜியம்... பாஜக அசுர வளர்ச்சி..

காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி தலைவர்கள்

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் என இரண்டுமே ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமல் மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளன.

  • Share this:
மேற்குவங்கத்தில் ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்து இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளுக்கு இந்த தேர்தலில் ஒரு சீட் கூட கிடைக்காதது தெரியவந்துள்ளது.

நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சியில் இருந்து வந்தது காங்கிரஸ் கட்சி தான். 1967 வரை மேற்குவங்கத்தில் ஆட்சியில் காங்கிரஸ்.கட்சி இருந்தது அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக பங்களா காங்கிரஸ் என்ற கட்சி உதயமானது. இடையில் பத்தாண்டு காலம் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி மீண்டுமொரு முறை 1972–77 முதல் 5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது.

1977ம் ஆண்டு இடதுசாரிகள் கூட்டணி மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்து முதல் முறையாக ஆட்சியில் அமர்ந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இணை நிறுவனர்களுள் ஒருவரான ஜோதி பாசு 1977 முதல் 2000 வரை 22 ஆண்டுகாலம் தொடர்ந்து முதல்வராக பதவி வகித்து சாதனை படைத்தார். இதன் மூலம் இந்தியாவில் மிக நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்தவர்களுள் ஒருவராகவும் அவர் மாறினார். அவருக்கு பின்னர் 2000 முதல் 2011 வரை மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரான புத்ததேப் பட்டாச்சார்யா முதல்வராக இருந்தார்.

இப்படி மேற்குவங்கத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் மிக மோசமான தோல்வியை பதிவு செய்திருக்கின்றன.

ராகுல் காந்தி


2011, 2016 என தொடர்ந்து 2 முறை முதல்வராக பதவியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இந்தத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று 3வது முறையாக முதலமைச்சராக இருக்கிறார்.

இத்தேர்தலில் இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இஸ்லாமிய கட்சியான ISF ஆகிய 3 கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் என இரண்டுமே ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமல் மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளன.

2016 தேர்தலில் காங்கிரஸ் 44 இடங்களிலும், சிபிஎம் 26, சிபிஐ ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. இதே போல 2011 தேர்தலில் சிபிஎம் 40, காங்கிரஸ் 42, சிபிஐ 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக தனது கணக்கை மேற்குவங்கத்தில் துவங்கியது. இதன் பின்னர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18-ல் வெற்றி பெற்று ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது.

இந்த முறை ஆட்சியை பிடிப்பதில் நேரடி போட்டி திரிணாமுல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்குமே இருந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் 215 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் பாஜக 74 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ், இடதுசாரி கூட்டணியில் அங்கம் வகித்த ISF இரண்டு தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் முடிவும் மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது..
Published by:Arun
First published: