கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து மெட்ரோ நகரங்களில் பெரு நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால், லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பையும், ஊதிய குறைப்பையும் எதிர்கொண்டனர். அதேபோல், நிறுவனங்களும் ஊழியர்கள் இல்லாமல் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்நிலையில், இந்த இழப்பை ஈடுகட்ட பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின.
சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்களுக்கு குடும்பத்துடன் இருந்தவாறு வேலை செய்யும் சூழல் கிடைத்தால், பலரும் இதனை விரும்பினர். ஊதியம் குறைவாக இருந்தாலும் மெட்ரோ நகரங்களில் ஆகும் செலவுகளை கணக்கிட்டு, வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வசதியை ஏற்றுக்கொண்டனர். பின்னர், மெல்ல கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து மீண்டும் மெட்ரோ நகரங்களுக்கு திரும்ப தொடங்கிய ஊழியர்கள், நிறுவனத்துக்கு சென்று வேலை பார்க்கும் பழைய நடைமுறையை ஆரம்பித்தனர்.
இந்நிலையில், வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறையை நிறுவனங்களும், ஊழியர்களும் எப்படி பார்க்கின்றனர் என்பது குறித்து இந்தியாவின் முன்னணி வேலை வாய்ப்பு இணையதளமாக உள்ள இண்டீட் (Indeed) கருத்து கணிப்பு நடத்தியது. அதில், 59 விழுக்காடு நிறுவனங்கள், ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நடைமுறையை விரும்பவில்லை என கூறியுள்ளனர். 10ல் 7 நிறுவனங்கள், கொரோனா வைரஸ் பாதிப்பு இயல்பு நிலைக்கு திரும்பியவுடன், வழக்கம்போல் நிறுவனத்திற்கு வந்து ஊழியர்கள் பணியாற்றும் முறை பின்பற்றப்படும் எனக் கூறியுள்ளனர்.
ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும்போது, அவர்களின் பணித்திறனில் எந்த குறைபாடும் இல்லை என நான்கில் 3 நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெரு நிறுவனங்களில் 67 விழுக்காடும், 70 விழுக்காடு மத்திய தர நிறுவனங்களும் ரிமோட் வேலை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 90 விழுக்காட்டினர் கூட கொரோனா இயல்பு நிலைக்கு பிறகு ஆபீஸ் செட்டப்பை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 46 விழுக்காடு ஊழியர்கள் ரிமோட் வேலை முறை தற்காலிகமானது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். 50 விழுக்காட்டினர் வேலைக்காக மீண்டும் நகரங்களுக்கு இடம்பெயர தயாராக உள்ளனர்.
கொரோனாவினால் சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்களில் 9 விழுக்காட்டினர் மட்டுமே மீண்டும் சொந்த ஊரிலேயே தங்கி வேலை செய்ய முடிவெடுத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சொந்த ஊரில் இருந்து வேலை பார்க்கும் போது வரும் ஊதிய குறைப்புகளை எதிர்கொள்ள 32 விழுக்காட்டினர் தயாராக உள்ளனர். உயர் பதவிகளில் இருப்பவர்களில் 88 விழுக்காட்டினர் ஊதிய குறைப்பை விரும்பவில்லை என்பது, தேவைப்படும் சமயத்தில் நகரங்களுக்கு இடம்பெற 50 விழுக்காட்டினர் தயாராக இருப்பதாவும் ஆய்வு கூறுகிறது.
இதுகுறித்து பேசிய இண்டீட் இணையதளத்தின் நிர்வாக இயக்குநர் சதீஷ் குமார், "கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு மார்ச் வரை ரிமோட் அல்லது வீட்டில் இருந்து வேலை தொடர்பான தேடல்கள் 437 விழுக்காடு அதிகரித்துள்ளது. ரிமோட் வேலை முறையில் நிறுவனங்கள் தங்கள் வேலை அமைப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். புதிய ஐடியாக்கள் மூலம் ஊழியர்களிடம் பணியின் திறன் குறையாமல் வேலையை பெறுவதற்கு, நிறுவனங்கள் கூடுதலாக சிந்திக்க வேண்டியிருந்தது. அதேநேரத்தில் பிரச்சனைகளை விரைவாக தீர்த்து, அடுத்த கட்ட நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள ஆபிஸ் செட்டப் பெரிதும் உதவியாக இருப்பதாக நிறுவனங்கள் சிந்திக்கின்றன. அவை சரியாகவும் உள்ளது. பணியாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும்போது, புதிய அவுட்புட் கிடைக்கிறது" எனத் தெரிவித்தார்.