Home /News /national /

பாஜக செய்தித் தொடர்பாளர் சர்ச்சை பேச்சால் கான்பூரில் மோதல் - 36 பேர் கைது

பாஜக செய்தித் தொடர்பாளர் சர்ச்சை பேச்சால் கான்பூரில் மோதல் - 36 பேர் கைது

கான்பூரில் மத மோதல்

கான்பூரில் மத மோதல்

மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் வீடியோ கான்பரென்சிங் மூலம் பேசிய முதலமைச்சர் ஆதித்யநாத், குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று மாலை இரு தரப்பினர் இடையே மத மோதல் வெடித்தது. டிவி விவாதத்தில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா என்பவர் முகமது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக கடந்த சில நாள்களாகவே விவாதம் எழுந்து வருகிறது.

    நுபுர் சர்மாவுக்கு எதிராக இபிகோ 153ஏ - மத மோதலை தூண்டும் விதமான பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், நுபுர் சர்மாவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கான்பூர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பின் தலைவர் சபார் ஹயத் ஹாஸ்மி பந்த்-க்கு அழைப்பு விடுத்தார். இந்த முழு அடைப்பு நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அங்கு குழுமி இருந்தனர். அப்போது மற்றொரு தரப்பு சந்தையில் கடைகளை மூட விருப்பம் இல்லை எனக் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு சலசலப்பு ஏற்பட்டு, அது இரு பிரிவினர் இடையே மத மோதலாக வெடித்தது. அங்கு கற்கல் வீசப்பட்டு பொது சொத்துக்கள் அடித்து சூறையாடப்பட்டன.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை  கலவரக்காரர்களை அடித்து விரட்டி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது. மேலும், மோதலில் ஈடுபட்ட 36 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த பந்த்தை ஏற்பாடு செய்த சபார் ஹயத் தலைமறைவாக உள்ள நிலையில், அவரையும் காவல்துறை தேடி வருகிறது. அத்துடன் சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய காவல்துறை முனைப்பு காட்டி வருகிறது.



    மேலும், மாவட்ட காவல்துறையிடம் வீடியோ கான்பரென்சிங் மூலம் பேசிய முதலமைச்சர் ஆதித்யநாத், குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். குற்றம் உறுதி செய்யப்பட்டால் பொது உடைமைகளை சேதப்படுத்தியவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் ஆணையர் விஜய் குமார் மீனா தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நாட்டிற்கு வலிமையான எதிர்க்கட்சி வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

    இது தொடர்பாக கான்பூர் மாவட்ட ஆட்சியர் நேகா சர்மா பேசுகையில், பகுதியில் சட்டம் ஒழுங்கு நிலைமை முதலில் மோசமாக இருந்த நிலையில், தகவல் அறிந்ததும் நானும், காவல்துறை ஆணையரும் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்த நிலையில், நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது என்றார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Hindu Muslim issues, Uttar pradesh

    அடுத்த செய்தி