Gang Rape : ஹைதராபாத்தில் மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம்: ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் கைது

Gang Rape : ஹைதராபாத்தில் மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம்: ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் கைது

கூட்டு பாலியல் வன்கொடுமை

சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் மயக்கமடைந்த நிலையில் கிடந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  • Share this:
    ஹைதராபாத்தில் கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தாக்கிய வழக்கில் ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று மாலை கல்லூரியிலிருந்து பேருந்தில் பயணித்து அங்குள்ள நாகாராம் சௌராஷ்டிரா பகுதியை அடைந்தார். பின்னர் அங்கிருந்து குடும்பத்துடன் வசித்து வரும் ஆர்.எல்.நகர் காலணிக்கு செல்ல 7 இருக்கைகள் கொண்ட ஆட்டோவில் ஏறினார்.

    வழக்கமாக அதே ஆட்டோவை அந்த மாணவி தன்னுடைய வீட்டுக்கு செல்வதற்காக பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் மாணவி ஆட்டோவில் இருந்தபோது ஒரு பெண் உட்பட 2 பேர் அதில் இருந்தனர். சற்று தூரம் சென்ற பின் அந்த பெண் ஆட்டோவிலிருந்து இறங்கி சென்றுவிட்டார்.

    இந்நிலையில் ஆட்டோ டிரைவர் மற்றும் அதிலிருந்த மற்றொரு வாலிபரும் அப்போது, அதில் இருந்தனர். தான் இறங்கி செல்ல வேண்டிய பகுதியை ஆட்டோ வந்து அடைந்த பின்னரும் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த மாணவி தன்னை ஆட்டோ டிரைவர் கடத்தி செல்வதாக செல்போன் மூலம் தன்னுடைய தாய்க்கு தகவல் கொடுத்தார்.

    தொடர்ந்து உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் மூலம் மாணவி கடத்தப்படுவது பற்றிய தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவியை கடத்தி வருவது பற்றி ஆட்டோ டிரைவர் தன்னுடைய நண்பர்களான மேலும் 4 பேருக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் நான்கு பேரும் கார் ஒன்றில் தயாராக காத்திருந்தனர். கார் இருந்த இடத்திற்கு ஆட்டோ வந்தபின் மாணவியை காரில் ஏற்றி 6 பேரும் அங்கிருந்து கடத்தி சென்றனர்.

    இந்நிலையில், காவல்துறையினர் ஜிபிஎஸ் மூலம் மாணவி இருக்கும் பகுதியை கண்டுபிடித்து, பத்து காவல் வாகனங்களில் அங்கு விரைந்தனர். இதற்கிடையில் மாணவியை ஆறுபேரும் தாக்கி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகின்றது.

    சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் மயக்கமடைந்த நிலையில் கிடந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இன்று ஹைதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

    இதற்கிடையில், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக 10 தனிப்படைகள் அமைத்து ஹைதராபாத் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மாணவியை அழைத்து சென்ற ஆட்டோவை கண்டுபிடித்து, அதன் டிரைவர் ராஜ் என்பவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் ராஜின் நண்பர்களான சிவா, நந்தன், பாஸ்கர், ரமேஷ், குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆறு பேரில் நான்கு பேரின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 6 பேரும் எண்ணம் பேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: