இந்தியாவில் கடும் கோடை காலம் நிலவும் நிலையில், தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு பிரச்னை தலைதூக்கியுள்ளது.மின் உற்பத்தி நிலையங்களில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில், இதன் தாக்கம் காரணமாக பல்வேறு பயணிகள் ரயில் சேவையை ரயில்வே துறை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
தேவைப்படும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு சரக்கு ரயில்கள் மூலம் துரிதமாக நிலக்கரி விநியோகம் செய்ய திட்டமிட்டு இந்த முடிவை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது. இது தொடர்பாக, இந்தியன் ரயில்வேயின் செயல் இயக்குனர் கவ்ரவ் கிருஷ்ணா பன்சால், தற்போதைய அவரச கால சூழலில் எடுத்துள்ள தற்காலிக முடிவு இது. மின் நிலையங்களுக்கு வேகமாக நிலக்கரியை கொண்டு சேர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரானதும் சேவைகள் வழக்கம் போல இயங்கும் என்றுள்ளார்.
அதேபோல், டெல்லியில் உள்ள தாத்ரி, உன்சார் மின் நிலையங்களில் நிலவும் தட்டுப்பாட்டால், தலைநகரில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி மெட்ரோ, மருத்துவமனை ஆகியவற்றின் சேவைகள் பாதிக்கும் என அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக அவரச ஆலோசனை நடத்திய டெல்லி மின் அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் மத்திய அரசிடம் தேவையான நிலக்கரியை விநியோகம் செய்யக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய மின் அமைச்சகம், நாட்டில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏதும் நிலவவில்லை. அதை விநியோகம் செய்வதில் தான் சிக்கல் நிலவுகிறது. பல்வேறு மாநில அரசுகள் நிலக்கரி வாங்கியதற்கான பாக்கி தொகையை செலுத்தாமல் உள்ளன. இதுவே இந்த சிக்கலுக்கு முக்கிய காரணம் எனக் கூறியுள்ளது. நாட்டின் வட மாநிலங்களில் வெப்பக் காற்று நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில், தலைநகர் டெல்லியில் வெப்பம் 46 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என எச்சரித்துள்ளது.
இந்த சூழலில் தற்போது எழுந்துள்ள மின் வெட்டு சிக்கலானது பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதை சீர்செய்ய மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தூரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.