ஹோம் /நியூஸ் /இந்தியா /

’இந்தியை திணிக்கும் முயற்சி நாட்டை பிளவுபடுத்தும்’ - பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

’இந்தியை திணிக்கும் முயற்சி நாட்டை பிளவுபடுத்தும்’ - பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி

முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன என்றும் இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள் - ஸ்டாலின்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தியை பயிற்று மொழியாக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிந்துரைத்திருந்த நிலையில், இந்தியை திணிக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மூவிற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டது.

  இளைஞர்கள் இந்தி படித்திருந்தால் மட்டுமே சில வேலைகளுக்குத் தகுதி பெறுவார்கள் என்றும் ஆட்சேர்ப்பிற்கான தேர்வின்போது கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை முதன்மைப்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.

  இது குறித்து கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரானவை என்றும் நமது தேசத்தின் பன்மொழிக் கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்திடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் “இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன என்றும் இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள், இந்த அட்டவணையில் இன்னும் சில மொழிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று பல கோரிக்கைகள் உள்ளன.

  இந்தியைத் திணிப்பதற்கான சமீபத்திய முயற்சிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை, அவை நாட்டினை பிளவுபடுத்தும். இது இந்தி பேசாத மக்களை பல விஷயங்களில் இரண்டாந்தர குடிமக்கள் போல பிரித்தாளுகிற தன்மை கொண்டது” என குறிப்பிட்டார்.

  இதையும் வாசிக்க: முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பண்ணை வீட்டில் கொள்ளை... இதுதான் காரணமா?

  மேலும் அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கருத்தில் கொண்டு தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக 8வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் எனவும் அனைத்து மொழிகளைப் பேசுவோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பினை வழங்க வேண்டும் என்பதே மத்திய அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

  எனவே இந்தியை திணிக்கும் வகையிலான நாடாளுமன்ற பரிந்துரையை முன்னெடுத்து செல்லாமல், இந்திய ஒற்றுமை சுடரை ஏந்தி பிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CM MK Stalin, Imposing Hindi, PM Modi