ஹோம் /நியூஸ் /இந்தியா /

கூண்டோடு ராஜினாமா செய்த அமைச்சரவை - தேர்தலுக்கு முன் புதிய அணியை கட்டமைத்த முதலமைச்சர் நவீன் பட்நாயக்

கூண்டோடு ராஜினாமா செய்த அமைச்சரவை - தேர்தலுக்கு முன் புதிய அணியை கட்டமைத்த முதலமைச்சர் நவீன் பட்நாயக்

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்

ஒடிசா அரசியல் வரலாற்றில் முதல்முறையாக அமைச்சர்கள் அனைவரும் நேற்று கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்த நிலையில், புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றது. ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சி தலைமையிலான ஆட்சியில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக முதலமைச்சராக நவீன் பட்நாயக் உள்ளார். இந்தியாவில் செல்வாக்கு மிக்க முதலமைச்சர்களில் ஒருவராக உள்ள இவர் அதிரடியாக அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவந்துள்ளார்.

  ஒடிசா அரசியல் வரலாற்றில் முதல்முறையாக அமைச்சர்கள் அனைவரும் நேற்று கூண்டோடு ராஜினாமா செய்தனர். இந்நிலையில் இன்று புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. இன்னும் 2 ஆண்டுகளில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவர் இந்த முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமைச்சர்களைப் போலவே சபநாயகர் சுர்ஜயா பட்ரோவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அம்மாநில தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் மாநில ஆளுநர் கன்சிலால் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

  13 பேருக்கு கேபினெட் பொறுப்பும், எட்டு பேருக்கு தனி அமைச்சரவை பொறுப்பும் வழங்கப்பட்டது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த எம்எல்ஏவான பகவான் ஜகன்நாத் சர்கா முதல் நபராக பதவியேற்றுக் கொண்டார். புதிய அமைச்சரவையில் 5 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் புதிய சபாநாயகராக முன்னாள் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரும், பீஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிக்ரம் கேசரி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஜகத்சிங்பூர் தொகுதி எம்எல்ஏ பிரசந்தா முதுலி கட்சியின் புதிய தலைமை கொறடாவாக நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

  இதையும் படிங்க: விரைவில் மின்சார ட்ராக்டர், லாரிகள் அறிமுகம் - நிதின் கட்கரி தகவல் 

  2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஒடிசாவின் முதலமைச்சராக தொடர்ந்து ஐந்து முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்தார் நவீன் பட்நாயக். 2024ஆம் ஆண்டு மீண்டும் அவர் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் இந்தியாவின் மிக நீண்ட காலம் முதலமைச்சராக தொடர்ந்து பதவி வகித்த பெருமையை நவீன் பட்நாயக் பெற உள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Naveen Patnaik, Odisha