Home /News /national /

காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் ஆலோசனைக் கூட்டம் - சோனியா காந்தி தலைமையில் இன்று தொடங்குகிறது

காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் ஆலோசனைக் கூட்டம் - சோனியா காந்தி தலைமையில் இன்று தொடங்குகிறது

சோனியா காந்தி, ராகுல் காந்தி

சோனியா காந்தி, ராகுல் காந்தி

Chintan shivir : தோல்விகளால் துவண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் வகையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சிந்தன் ஷிவிர் எனும் 3 நாள் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று தொடங்குகிறது.

    உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. பஞ்சாபிலோ ஆம் ஆத்மியிடம் ஆட்சியை இழந்தது.

    காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளால் அதிர்ச்சி அடைந்த குலாம் நபி ஆசாத், கபில்சிபல், சசி தரூர், ராஜ் பப்பர் உள்ளிட்ட G23 எனப்படும் மூத்த 23 தலைவர்கள் தலைமை மாற்றத்தை வலியுறுத்தி சோனியாவுக்கு கடிதம் எழுதியதுடன் அதிகாரக் குவியல் இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் முடிவெடுக்கும் அதிகாரம் வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

    அதைத் தொடர்ந்து மார்ச் 14 ஆம் தேதி டெல்லியில் கட்சியின் செயற்குழு கூட்டப்பட்டது. அப்போது ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சிலர் வலியுறுத்தினர். எனினும் சோனியா காந்தி தற்காலிக தலைவராக தொடர்வார் என்றும் சிந்தன் ஷிவிர் எனும் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பான தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவது என்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சிந்தன் ஷிவிர் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் தற்போது 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நூற்றுக்கும் குறைவான எம்பி-க்களே உள்ள நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரசின் சிந்தன் ஷிவிர் கூட்டம் நடைபெறவுள்ளது.

    இதில் 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக வியூகங்கள் வகுக்கப்படவுள்ளது. மேலும் கட்சியை நிர்வாகரீதியாக வலுப்படுத்துவது, அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பது போன்றவை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. மேலும், திரிணமுல் காங்கிரஸ், டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி பற்றியும் ஆம் ஆத்மியின் அசுர வளர்ச்சி பற்றியும் விவாதிக்கப்படவுள்ளன.

    சோனியா காந்தியின் தொடக்கவுரையுடன் துவங்கவுள்ள இக்கூட்டத்தில் பஙகேற்பதற்காக ராகுல் காந்தி ரயில் மூலம் உதய்பூருக்கு நேற்றிரவு புறப்பட்டுச் சென்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 400-க்கும் அதிகமான மூத்த நிர்வாகிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைக்க உள்ளனர்.

    Must Read : சசிகலாவுக்கு காலம் கடந்த ஞானோதயம் வந்துள்ளது - கடம்பூர் ராஜூ விமர்சனம்

    கடைசி நாளான ஞாயிறன்று, ராகுல் காந்தி நிறைவுரை ஆற்றவுள்ளார். அப்போது தீர்மானங்களும் இயற்றப்படவுள்ளன. ஆளும் பாஜக அசுர வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் தேய்பிறையாய் கரைந்து வரும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸை இந்த 3 நாள் சிந்தன் ஷிவிர் கைதூக்கிவிடாதா என தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Congress, Rahul gandhi, Sonia Gandhi

    அடுத்த செய்தி