கோவிட்-19 தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 6 மாதங்களாக தாஜ்மஹால் உட்பட இந்தியாவிலுள்ள எந்த சுற்றுலாத் தலங்களையும் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் 8-ஆம் கட்டமாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று தாஜ்மஹால் திறக்கப்பட்டது. அதிகாலை 5.39 மணிக்கு தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க சீன நாட்டைச் சேர்ந்த லியாங் சியாச்செங் என்பவர் முதலில் தனது பெயரைப் பதிவு செய்து பார்வையிட்டார்.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளபோதிலும், பல சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹால், ஆக்ரா கோட்டையைப் பார்வையிட வந்தனர். வழிகாட்டு நெறிமுறையின்படி, மாவட்ட அதிகாரிகள் ஒரு நாளைக்கு 5,000 பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்தனர். இரண்டு தொகுதிகளாக, அதாவது சூரிய உதயம் முதல் மதியம் வரை மற்றும் மதியம் 12.30 மணியிலிருந்து சூரிய அஸ்தமனம் வரை என நேரம் ஒதுக்கியுள்ளனர்.
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ), 20 வெளிநாட்டினர் உட்பட 1,235 பேர் தாஜ் மஹாலுக்கு வருகை தந்ததாக தெரிவித்துள்ளது. சுற்றுலாச் செயல்பாடுகள் ஊரடங்கால் 180 நாட்களுக்கு மேலான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தாலும், உள்ளூர் வணிகர்கள் இயல்பாக தம் வேலையைத் தொடர சிறிது காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.
Also read: தென்னிந்தியாவின் மர்லின் மன்றோ 'சில்க் ஸ்மிதா'
வைரஸின் விரைவான பரவலை மனதில் கொண்டு, தாஜ் மஹாலுக்கு நேரடி டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தங்கள் மொபைல் தொலைபேசிகளில் இ-டிக்கெட்டுகளை எடுத்து வருகின்றனர். பிபிஇ எனும் பாதுகாப்பு உபகரணங்களுடன் இருக்கும் ஊழியர்கள், வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனிங் மற்றும் கை - கால்களில் சானிடைசர் தெளித்து உள்ளே அனுமதிக்கின்றனர். நுழைவாயில்களையும் தொடர்ந்து சுத்தப்படுத்துமாறு ஊழியர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
தாஜ்மஹாலுக்கு வருகை தந்தவர்களில் டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி “முதல் முறையாக” தாஜ்மஹாலைக் காண வருகை தந்துள்ளதாகத் தெரிவித்தனர். இதேபோல ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க வந்தார்.
இந்த ஆண்டு மார்ச் முதல் அந்த ரஷ்ய நாட்டவர் இந்தியாவில் சிக்கித் தவித்து வருகிறார். இதுகுறித்து பேசிய அவர், "சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டபோது நான் ஜெய்ப்பூரில் இருந்தேன், அதனால் எனது ஊருக்குச் செல்ல முடியாமல் நான் சிக்கிக்கொண்டேன். வீட்டிற்குச் செல்ல இப்போது நிலைமை மேம்பட்டுள்ளதால் 15 நாட்களில் நான் வீடு திரும்புவேன். நான் இங்கே இருக்கும்போது தாஜ் மஹாலைப் பார்க்கலாம் என்று நினைத்தேன்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Taj Mahal