வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.8,316 கோடி அளவுக்கு பாதிப்பு

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.8,316 கோடி அளவுக்கு பாதிப்பு
  • News18
  • Last Updated: August 13, 2018, 4:27 PM IST
  • Share this:
கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 8,300 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உடனடியாக 400 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள 27 அணைகளும் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், திறக்கப்பட்டன. இதனால், 10 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. வெள்ள பாதிப்புகளால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து ராணுவத்தினர் இடையறாது மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் 50,000 மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த வயநாடு, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களை ஆய்வு செய்தார். அவருடன், மத்திய அமைச்சர் அல்போன்ஸ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்


முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராஜ்நாத் சிங், பாதிப்பை கணக்கிட கால அவகாசம் தேவைப்படும் என்பதால், உடனடியாக கூடுதல் நிவாரண நிதியாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், 1924ம் ஆண்டுக்கு பின் மிகப்பெரிய வெள்ள பாதிப்பை கேரளா சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், 20,000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 10,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மாநில சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மாநிலம் முழுக்க வெள்ளத்தால் 8,316 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நிவாரண நிதியாக 400 கோடியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே 820 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
First published: August 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading