சத்திஸ்கர் மாநிலம் பிஜபுர் டர்ரெம் அருகே உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதனால் பாதுகாப்புப் படையினரும் பதிலுக்குத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உட்பட இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் பாதுகாப்புப் படையினர் தரப்பில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த வீரர்கள் ராணுவ ஹெலிகாப்படர்கள் மூலம் மீட்கப்பட்டனர். முன்னதாக, கடந்த மார்ச் 23ஆம் தேதி பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் நிகழ்த்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
My thoughts are with the families of those martyred while fighting Maoists in Chhattisgarh. The sacrifices of the brave martyrs will never be forgotten. May the injured recover at the earliest.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், துணிச்சலான வீரர்களின் தியாகம் ஒரு போதும் மறக்க முடியாது என்றும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தனது எண்ணங்கள் துணையிருக்கும் என்றும் கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.