கொரோனா தாக்கம் மற்றும் பல காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாத காரணத்தால் நிறைய வங்கிகள் திவாலாகும் சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து வாரக்கடனை கட்டுப்படுத்தவும், சிக்கலில் இருந்த வங்கிகளை மீட்கவும் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து அதற்கான முயற்சியில் இறங்கின.
இதற்காக ஒரு புதிய திட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய திட்டத்தின் படி சிறு வங்கிகளான தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திர வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கி போன்ற வங்கிகள் நாட்டில் இருக்கும் பெரு வங்கிகளுடன் இணைக்கப்பட்டது. தேனா மற்றும் விஜயா வங்கி முறையே பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டன. சிண்டிகேட் வங்கியானது கனரா வங்கியுடனும், ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும், அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டது.
இதனை அடுத்து அடுத்த மாதம் அதாவது வரும் 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் மேற்கண்ட 8 சிறு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் செக் புக்குகள் மற்றும் பாஸ்புக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 8 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் , தாங்கள் கணக்கு வைத்திருந்த சிறுவங்கிகளின் பாஸ்புக் மற்றும் செக் புக்கை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பயன்படுத்த முடியாது. இவற்றை பயன்படுத்த விரும்பினால் தங்களது வங்கிகள் இணைக்கப்பட்டுள்ள புதிய வங்கிகளுக்கு சென்று புதிய செக் புக் மற்றும் பாஸ்புக் வாங்கிக்கொள்ள வேண்டும்
Also read... கடன்களிலிருந்து வரியை சேமிக்க சில உதவிக்குறிப்புகள்...!
மேலும் இந்த 8 வங்கிகளுடைய வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கின் IFSC கோடு மற்றும் MICR கோட் ஆகியவையும் மாற்றம் செய்யப்பட உள்ளது. இது குறித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட வங்கிகள் எஸ்எம்எஸ் வாயிலாக எச்சரிக்கை செய்திகள் அனுப்பியுள்ளன. மேலும் எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் வழியாக அனைத்து முக்கியமான தகவல்கள் மற்றும் அப்டேட்களை பெற, இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண், முகவரி, நாமினி போன்ற விவரங்களை புதுப்பிக்க வேண்டும்.
மேலும் வாடிக்கையாளர்கள் புதிய செக் புக் மற்றும் பாஸ் புக் பெற்று கொண்ட பிறகு, வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் , வர்த்தக கணக்குகள், ஆயுள் காப்பீட்டுக் கொள்கை, வருமான வரி கணக்கு, எஃப்.டி / ஆர்.டி, பி.எஃப் கணக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்களது புதிய வங்கி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். சிரமங்களை தவிர்க்க வங்கி கணக்கு விவரங்களை புதுப்பிக்க வேண்டியது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.