வெற்றிகரமாக நிலவு வட்டப்பாதையை எட்டிய சந்திரயான்-2!

சந்திரயான்

  • News18
  • Last Updated :
  • Share this:
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான்-2 விண்கலம், புவி வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் வட்டப்பாதையை நோக்கி வெற்றிகரமாக பயணத்தை தொடங்கியுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. புவி வட்டப்பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த இந்த விண்கலம் படிப்படியாக 5 முறை நிலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 22 நாட்களாக புவியை நீள்வட்ட பாதையில் சுற்றி வந்த நிலையில் நிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி விண்கலத்தை செலுத்தும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று மேற்கொண்டனர்.

இதற்காக அதிகாலை 2.21 மணிக்கு விண்கலத்தில் உள்ள திரவ என்ஜின் இயக்கப்பட்டது. 20 விநாடிகள் இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிலவை நோக்கிய பயணம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. வரும் 20-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் விண்கலம் சென்றடையும்.

அங்கிருந்து நிலவை நெருங்குவதற்கு 5 முதல் 6 முறை எஞ்சின் இயக்கப்பட்டு நிலை உயர்த்தப்படும். நிலவுக்கு அருகே 100 கிலோ மீட்டர் தொலைவில் விண்கலன் சென்றதும், நிலவின் தென் பகுதியில் தரையிறங்க வேண்டிய இடத்தை ஆய்வு செய்யும். இதற்கு பின் செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென் பகுதியில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்கும். இதில், ஆர்பிட்டர் என்ற அமைப்பு ஓராண்டு வரை நிலவைச் சுற்றி வந்தபடி ஆய்வு மேற்கொள்ளும்.

ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து செல்லும் லேண்டர் அமைப்பு நிலவில் தரையிறங்கிய 14 நாட்களும், ரோவர் என்ற 6 சக்கரங்களை கொண்ட வாகனம் நிலவின் தரைப் பரப்பில் 14 நாட்களில் 500 மீட்டர் வரை ஊர்ந்து சென்றும் ஆய்வு மேற்கொள்ளும். நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டரில் 8 பேலோடுகளும், நிலவின் தரைப்பகுதியை ஆய்வு செய்வதற்காக லேண்டரில் 3 பேலோடுகளும், ரோவரில் 2 பேலோடுகளும் பொருத்தப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி விண்கலம் செலுத்தும் பணிகள் நடைபெற்றால் ஆர்பிட்டரின் ஆயுள் காலம் இரண்டாண்டுகள் வரை இருக்கக் கூடும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Published by:Karthick S
First published: