2.1 கி.மீ தொலைவில் மகிழ்ச்சியை குலைத்த சோகம்... பரபரப்பான அந்த நிமிடங்கள்...!

chandrayan 2 | திட்டமிட்டபடி தரையிறங்குவதில் விக்ரம் லேண்டருக்கு சிக்கல் எழுந்ததை அடுத்து பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

news18
Updated: September 7, 2019, 10:13 AM IST
2.1 கி.மீ தொலைவில் மகிழ்ச்சியை குலைத்த சோகம்... பரபரப்பான அந்த நிமிடங்கள்...!
இஸ்ரோ மையம் (PTI)
news18
Updated: September 7, 2019, 10:13 AM IST
உலகமே உற்றுநோக்கிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியபோது, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும், முடிந்தளவு சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்த சந்திரயான்-1 திட்டத்தைத் தொடர்ந்து, 978 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சந்திரயான் - 2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற மூன்று அமைப்புகளைக் கொண்டது. கடந்த மாதம் 20-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து கடந்த இரண்டாம் தேதி பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது.

நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டர், அதிகாலையில் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டது. எரிபொருள் உள்பட ஆயிரத்து 471 கிலோ எடையுள்ள விக்ரம் லேண்டருக்குள் பிரக்யான் ரோவர் இருந்தது. இந்திய நேரப்படி அதிகாலை 1.40 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்க ஆயத்தமானது.


படிப்படியாக தரையிறங்கும் கட்டளை பெங்களூரு மையத்தில் இருந்து அளிக்கப்பட்டது.அப்போது விஞ்ஞானிகள் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனிடையே, விக்ரம் லேண்டர் நிலவில் இறங்குவதை காண, பிரதமர் மோடி, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்திருந்தார்.

15 நிமிட டெரர் எனப்படும் வேகம் திட்டமிட்டபடி குறைந்துகொண்டே சென்ற நிலையில், நிலவின் மேல்பரப்பில் இருந்து சுமார் 2.1 கிலோமீட்டர் தொலைவு வரை மிகச் சரியாக சிக்னல்களை அளித்து வந்த விக்ரம் லேண்டரின், தகவல் தொடர்பு துண்டானது. இந்த தருணத்தில் விஞ்ஞானிகள் முகம் சோகமாக மாறியது.

நேரம் செல்ல செல்ல அசாதாரண சூழல் நிலவியது, பின்னர் இஸ்ரோ தலைவர் சிவன், அங்கு வந்திருந்த பிரதமரிடம் விளக்கம் அளித்தார். பின்னர் தகவல் தொடர்பு துண்டானதை அறிவித்தார். தொடர்ந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Loading...

திட்டமிட்டபடி தரையிறங்குவதில் விக்ரம் லேண்டருக்கு சிக்கல் எழுந்ததை அடுத்து பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், இஸ்ரோவிஞ்ஞானிகளை பாராட்டி பதிவிட்டார். அதில், நமது விஞ்ஞானிகளால் பெருமை கொள்வதாகவும், தங்களால் முடிந்தளவு சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். விண்வெளி திட்டத்துக்காக தொடர்ந்து உழைப்போம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, இஸ்ரோ விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இஸ்ரோவை எண்ணி நாடே பெருமை கொள்வதாகவும் நல்லதே நடக்கும் என நம்புவோம் என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

First published: September 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...