ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாஜக, காங்கிரஸை ஓரம்கட்டிய ஆம் ஆத்மி.. ‘இது சும்மா ட்ரெயிலர் தான்..’

பாஜக, காங்கிரஸை ஓரம்கட்டிய ஆம் ஆத்மி.. ‘இது சும்மா ட்ரெயிலர் தான்..’

chandigarh election

chandigarh election

ஆம் ஆத்மி முந்தியிருப்பது குறித்து அக்கட்சியின் ராகவ் சத்தா கூறுகையில், இது வெறும் ட்ரெயிலர் தான், மெயின் பிக்சர் எதிர்வரும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் தான் என்றார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கியுள்ள ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விட அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வென்று திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

  பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் ஒற்றைத் தலைநகராக திகழும் சண்டிகர் ஒரு யூனியன் பிரதேசமாகும். சுதந்திர இந்தியாவுக்கு பின்னர் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த நகரத்தின் Capitol Complex யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எழில்மிகு நகரங்களில் ஒன்றாக திகழும் சண்டிகர் மாநகராட்சிக்கான தேர்தல் கடந்த வெள்ளிக் கிழமையன்று நடைபெற்றது. 35 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

  முன்னதாக பாஜக vs காங்கிரஸ் என இருந்த சண்டிகர் அரசியல், சில கால மாற்றங்களால் நான்கு முனை போட்டியாக இந்த முறை மாறியிருந்தது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சியுடன் சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கிறது. காங்கிரஸ், பாஜக தனித்து களம் கண்டுள்ளன. சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில் இந்த முறை ஆம் ஆத்மி முதல் முறையாக களம் கண்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து ஆம் ஆத்மிக்கு சாதகமான மாநிலமாக பஞ்சாப் மாறியிருப்பதால் சண்டிகர் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

  Also read:  15-18 வயது சிறுவர்கள் தடுப்பூசி செலுத்த ஜனவரி 1 முதல் முன்பதிவு - தேவையான ஆவணம் என்ன?

  வாக்கு எண்ணிக்கை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மதியம் 1.30 நிலவரப்படி அறிமுக போட்டியாளராக களமிறங்கிய ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 35 வார்டுகளில் 14 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக 10 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், அகாலி தளம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

  கடந்த தேர்தலில் பாஜக 20, காங்கிரஸ் 4, அகாலி தளம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தன. விவசாயிகளின் போராட்டம் காரணமாக அகாலி தளம், பாஜக கூட்டணியில் இருந்து விலக நேரிட்டது. மேலும் விவசாயிகள் போராட்டம் ஆம் ஆத்மிக்கு சாதகமான சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த தேர்தலில் 26 வார்டுகளாக இருந்த நிலையில் தற்போது வார்டுகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

  பாஜகவின் முன்னாள் மேயர்கள் ரவி காந்த் சர்மா, தவேஷ் மவுத்கில் ஆகிய இருவரும் தோல்வியடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஆம் ஆத்மியின் தேர்தல் கமிட்டி தலைவர் முகி சர்மா தோல்வியடைந்துள்ளார்.

  Also read:  120 மணி நேர ரெய்டு.. ரூ.257 கோடி ரொக்கம் பறிமுதல்.. தொழிலதிபர் வீட்டில் பணப் புதையல்..

  பாஜக, காங்கிரஸை, ஆம் ஆத்மி முந்தியிருப்பது குறித்து அக்கட்சியின் ராகவ் சத்தா கூறுகையில், இது வெறும் ட்ரெயிலர் தான், மெயின் பிக்சர் எதிர்வரும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் தான். மக்கள் அனைவரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாய்ப்பு கொடுக்க தயாராகிவிட்டார்கள் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கின்றன என தெரிவித்தார்.

  வாக்கு எண்ணிக்கை இன்னமும் முடிவடையாத நிலையில் சண்டிகர் மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றுமா என்பது பரபரப்பாக மாறியிருக்கிறது.

  Published by:Arun
  First published:

  Tags: Aam Aadmi Party, BJP, Congress