ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ்  கட்சியின் புதிய தலைவர் கார்கேவுக்கு காத்திருக்கும் சவால்கள்...!

காங்கிரஸ்  கட்சியின் புதிய தலைவர் கார்கேவுக்கு காத்திருக்கும் சவால்கள்...!

மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே

Mallikarjun Kharge | காங்கிரஸ்  கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கார்கேவின் அரசியல் பயணம் குறித்தும், அவர் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் குறித்தும் இதில் பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  காங்கிரஸ்  கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கார்கேவின் அரசியல் பயணம் குறித்தும், அவர் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் குறித்தும் பார்க்கலாம்.

  தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, சுதந்திரத்திற்கு பிறகு தென் மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 7-வது  காங்கிரஸ் தலைவர் ஆவார். 1942-ம் ஆண்டு கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் பிறந்த அவர்  அண்டை மாவட்டமான குல்பார்காவில் வளர்ந்தார். அங்கு சட்டப்படிப்பை  முடித்த கார்கே, தொழிலாளர் சங்கங்களின் வழக்குகளில் ஆஜராகி வந்தார். மாணவ பருவத்திலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த கார்கே 1969-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

  1972-ம் ஆண்டு அப்போதைய கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருந்த தேவராஜ் அர்ஸ், கார்கேவை, உயர் சாதியினர் அதிகம் உள்ள தொகுதியான குர்மித்கல்லில் போட்டியிட வைத்தார்.  தனது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்ற கார்கே அதே தொகுதியை தொடர்ந்து 9 முறை கைப்பற்றினார்.

  இதையும் படிங்க : நிதீஷ்குமார் தற்போதும் பாஜகவுடன் தொடர்பில் உள்ளார்- பிரசாந்த் கிஷோர் பகீர் குற்றச்சாட்டு

  சிறந்த நிர்வாகியாக அறியப்படும் கார்கே கர்நாடக காங்கிரஸ் அரசுகளில் பலமுறை அமைச்சராக பதவி வகித்தவர். 2009-ம் ஆண்டு குல்பர்கா மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற கார்கே டெல்லி அரசியலுக்கு நகர்ந்தார்.  அதே தொகுதில் 2014-ம் ஆண்டு வெற்றி பெற்றார். ஆனால் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தார். எனினும் மாநிலங்களவை உறுப்பினராக அவருக்கு காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பளித்தது.

  இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சித் தலைவராகவும், ரயில்வே,  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். மிகவும்  நெருக்கடியான காலகட்டத்தில் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கார்கேவுக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.

  2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 53 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.  இது மட்டுமல்லாமல் ஏராளமான மாநிலங்களிலும் ஆட்சியை இழந்துள்ளது. இதனால் கட்சியை பலப்படுத்தும் மிக முக்கிய பணி கார்கே முன் நிற்கிறது.  மேலும் தான்  காந்தி குடும்பம் ஆட்டுவிக்கும் பொம்மை அல்ல என்றும், கட்சி தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர்  நிரூபிக்க வேண்டும்.

  இதையும் படிங்க : காங்கிரஸ் தலைவர் தேர்தலில் முறைகேடு- சசி தரூர் தரப்பு பகீர் கடிதம்

  அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “அனைத்து விவகாரங்களிலும் நான் காந்தி குடும்பத்தினரை கலந்து ஆலோசிக்க மாட்டேன்” என்று  கூறியிருந்தார். காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பலவீனமாக கருதப்படுவது தொடர்ச்சியாக கட்சியை விட்டு மூத்த உறுப்பினர்கள் வெளியேறுவது. அதிருப்தியாளர்கள், கோஷ்டி பூசல்  என அனைத்தையும்  ஒன்றிணைப்பதும் கார்கேவுக்கு  சவாலானதாகவே இருக்கும்.

  முக்கியமாக பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும்  எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலும் காத்திருக்கிறது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Congress, Mallikarjun Kharge