முன்களப் பணியாளர்களுக்கு மத்திய அரசு செலவில் தடுப்பூசி செலுத்தப்படும் - முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி

முன்களப் பணியாளர்களுக்கு மத்திய அரசு செலவில் தடுப்பூசி செலுத்தப்படும் - முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி

மோடி

நாடு முழுவதுமுள்ள 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு மத்திய அரசு செலவில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நாடு முழுவதும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஜனவரி 16-ம் தேதி முதல் செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு முதல்வர்களுடன் மோடி ஆலோசனை நடத்துவது இதுதான் முதல்முறை. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘மூன்று கோடி தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்ட பிறகு, அடுத்து மீண்டும் நாம் உட்கார்ந்து என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை நடத்தவேண்டும். மாநில அரசுகள் நேரடியாக நேரடியாக தடுப்பு மருந்துகளை வாங்கினால் தடுப்பு மருந்துகளின் விலையை நிர்ணயம் செய்வதில் நிறுவனங்களுக்கு பிரச்னை ஏற்படும். மத்திய அரசு தனிப்பட்ட முறையில் பொறுப்பெடுத்து வாங்குவதுதான் சிறந்தது. அது நாட்டுக்கு சிறந்தது.

  தடுப்பூசிகள் குறித்த சந்தேகங்கள் குறித்து விஞ்ஞானிகள் விளக்கவேண்டும். இரண்டு தடுப்பூசிகளுக்கு சர்வேதச விஞ்ஞானிகள் சமூகம் வகுத்துள்ள நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு ஏற்கும். அரசியல்வாதிகள் முன்னதாகவே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முயற்சி செய்யக் கூடாது. அவர்களுடைய முறை வரும் வரை காத்திருக்கவேண்டும். மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரைப்பதன் அடிப்படையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன என்பதை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.

  எல்லா குடிமகன்களுக்கும் தடுப்பூசி கிடைக்கவேண்டும். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை வல்லுநர்கள் குழு பார்த்துக்கொள்ளும். நாடு முழுவதும் 3 கோடி முன்களப் பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த செலவு குறித்து மாநில அரசுகள் கவலைக் கொள்ளவேண்டாம். இரண்டாம் கட்டமாக 50 வயதைக் கடந்தவர்கள் மற்றும் 50 வயதுக்கு குறைவான இணை நோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில் 30 கோடி பேருக்கு தடுப்பு மருந்து செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் அவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்படும். தனியார் மற்றும் அரசு முன்களப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பு மருந்து செலுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: