விவசாயிகள் போராட்டம்: 1,178 ட்விட்டர் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு

ட்விட்டர்

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பொய்யான கருத்துகளையும் வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும் கருத்து பதிவதாக 1,178 ட்விட்டர் கணக்குகளை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  வேளாண் துறையில் மாற்றங்கள் கொண்டுவதற்காக விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020 என்ற மூன்று சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டுவந்தது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்துக்கு விவசாயிகள் மேற்கொண்ட ட்ராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. டெல்லி செங்கோட்டையில் அனுமதியை மீறி விவசாயிகள் நுழைந்தனர். அதனையடுத்து, விவசாயிகள் போராட்டம் சர்வதேச கவனம் பெற்றுள்ளது. விவசாயிகள் போராட்டம் நடத்தும் டெல்லியை ஒட்டிய பகுதிகளில் மத்திய அரசு இணைய வசதியை துண்டித்தது.

  இருப்பினும், விவசாயிகள் போராட்டம் 80 நாள்களைக் கடந்து தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்தநிலையில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராக ட்விட்டரில் நெட்டிசன்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்துவருகின்றனர். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து பதிவிடுபவர்கள் சிலர் விவசாயிகள் இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் வகையில் #farmers genocide என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திவருகின்றனர். இதுதொடர்பாக, மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்துக்கு எச்சரிக்கைவிடுத்தது. அதனையடுத்து, இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திய ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் சஸ்பெண்ட் செய்தது.

  ஆனால், சிறிது நேரத்தில் அந்த கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் மீண்டும் செயல்பட அனுமதித்தது. அதனையடுத்து, ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கைவிடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிடும் கணக்குகளை நிரந்தரமாக முடக்கவேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. இந்தநிலையில், மத்திய அரசு 1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த, 1,178 பேரும் பாகிஸ்தான், காலிஸ்தான் ஆதரவு பெற்ற கணக்குகள் என்று மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. அவர்கள், தவறான தகவல்களைப் பரப்பி மக்களைத் தூண்டிவிடுகிறார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து விளக்கமளித்துள்ள ட்விட்டர் நிர்வாகம், ‘ட்விட்டர் சட்டவிரோதமாக கருத்துகள் பதிவிடப்படுவதாக சட்டப்படியான புகார் வந்தால் நாங்கள், அந்த ட்வீட் குறித்து ட்விட்டர் விதிமுறைகளுக்கும், அந்த நாட்டின் சட்டவிதிமுறைகளுக்கும் கீழ் உள்ளதாக என்று ஆராய்வோம். ஒருவேளை அந்த ட்வீட், ட்விட்டர் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியிருந்தால் அந்த ட்வீட் உடனடியாக நீக்கப்படும். ஒருவேளை, ட்விட்டர் நிர்வாகத்துக்கு உட்பட்டு ட்வீட் இருந்து, நாட்டின் சட்டத்தை மீறியிருந்தால், அந்த நாட்டின் எல்லைக்குள் மட்டும் அந்த ட்வீட்டை நிறுத்திவைப்போம்’ என்று தெரிவித்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: