ஹோம் /நியூஸ் /இந்தியா /

மத்திய அரசின் கடிதம்… மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொலிஜியம் விவகாரம்

மத்திய அரசின் கடிதம்… மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொலிஜியம் விவகாரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நீதிபதிகளின் தேர்வு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்றால் கொலிஜியத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது…

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அண்மைக்காலமாக கொலிஜியம் விவகாரத்தில் நீதித்துறையும், மத்திய அரசும் எதிர்மறை கருத்துக்களை மேற்கொண்டு வருவதால் லேசான மோதல் போக்கு நிலவுகிறது. இந்த மோதல் போக்கை வலுப்படுத்தும் விதமாக தற்போது மத்திய அரசு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதோடு, கொலிஜியத்தின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த யோசனையை முன்வைத்துள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. என்ன தான் நடக்கிறது இந்த விவகாரத்தில் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக சில துறைகள் இருக்கின்றன. அதில் முக்கியாமான ஒன்று நீதித்துறை. அதனால் தான் நம் நாட்டின் பிரதமருக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமானம் செய்து வைக்கும் அதிகாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழங்கியுள்ளது நம் அரசியலமைப்பு சாசனம். அந்த அளவு பெருமையும் பொறுப்பும் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் நான்கு மூத்த நீதிபதிகளைக் கொண்ட அமைப்பு தான் கொலிஜியம் அமைப்பு.

இந்த கொலிஜியம் அமைப்பு உச்ச நீதிமன்றத்திற்கான நீதிபதிகளை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அந்த பரிந்துரையின் அடிப்படையில் நீதிபதிகளை நியமித்து அறிவிப்பு செய்வார் குடியரசுத் தலைவர். இந்த நீதிபதிகள் தேர்வு நடைமுறையில் தான் மாற்றம் வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.மத்தியில் இரண்டாவது முறைாயக பாஜக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று ஒரே நாடு ஒரே தேர்தல். அதே போல் நீதித்துறையின் கொலிஜியம் நடைமுறையிலும் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது.

இதற்கான முன்னெடுப்புகளை அவ்வப்போது மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் அடுத்த படியாகத்தான்  மத்திய அரசின் சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜூ தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதம். 'உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட கொலிஜியம் அமைப்பின் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில், வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புணர்வையும் ஊக்குவிக்க அரசு விரும்புகிறது. இதற்காக, கொலிஜியம் குழுவில் அரசு பிரதிநிதிகள் சேர்க்கப்படுவதை அரசு பரிந்துரைக்கிறது'' என ரிஜிஜூ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ''தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தபோது, அது ஒரு உத்தரவை பிறப்பித்தது. கொலிஜியத்தின் செயல்முறை மாற்றப்பட வேண்டும் என்பதுதான் அது. உச்ச நீதிமன்றத்தின் அந்த உத்தரவை பின்பற்றியே, தற்போது தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தீபக் மிஸ்ரா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது, உத்தரகண்ட் மாநி்லத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. ஜோசப்பை விட மூத்த நீதிபதிகள் இருப்பதாக மத்திய அரசு கருத்து தெரிவித்தது. அப்போதிருந்தே கொலிஜியத்திற்கும் மத்திய அரசுக்குமான எதிர்மறை போக்கு தொடங்கிவிட்டது என்றே கூறலாம்.

அதன் நீட்சிதான் இப்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும்.

கொலிஜியம் முறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்பேற்கும் முறை இல்லை என்று ஒரு மாதத்திற்கு முன்பு கிரண் ரிஜிஜூ வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்படும் பெயர்களைத்தான் அரசு ஏற்க வேண்டும் என்றால், அதில் அரசுக்கு என்ன பங்கு இருக்கிறது என அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

நாடாளுமன்றத்திற்கு இருக்கும் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நீதித்துறை மதிக்க வேண்டும் என்றும் அதில் தலையிடுவதற்கு நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் சமீபத்தில் கூறி இருந்தார்இந்த பின்னணியில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Central government