தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் அபராதத் தொகையை நேற்று நள்ளிரவுக்குள் செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
செல்போன் விற்பனை, டிவிடென்ட் உள்ளிட்ட பிற வருவாய்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டும் என புதிய வருவாய் பங்கீட்டு முறையை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 92,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.
இந்த தொகையை உடனடியாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது. இதே போன்று, அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் உள்ளிட்டவற்றுக்கான 55 ஆயிரத்து 54 கோடி ரூபாயையும் அரசுக்கு தொலை தொடர்பு நிறுவனங்கள் செலுத்தாமல் இருந்தன.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, உத்தரவு பிறப்பித்தும் பணம் செலுத்தாத தொலைத்தொடர்பு நிறுவனங்களை நீதிபதிகள் நேற்று சாடினர். அதனைத் தொடர்ந்து, நாட்டின் மூன்று பிரபல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி அபராதத் தொகையை நேற்று நள்ளிரவுக்குள் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி வோடபோன் நிறுவனம் 53 ஆயிரம் கோடியையும், ஏர்டெல் 35 ஆயிரத்து 500 கோடியையும் நேற்று நள்ளிரவு 11.59க்குள் செலுத்த கெடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி 20-ம் தேதிக்குள் 10,000 கோடியை மத்திய அரசுக்கு செலுத்துவதாகவும், எஞ்சிய தொகையை வழக்கின் அடுத்த விசாரணைக்குள் செலுத்துவதாகவும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், வோடபோன் நிறுவனமும் தன்னுடைய நிலுவைத் தொகையை செலுத்துவது குறித்து எந்த தகவலையும் மத்திய அரசுக்கு அளிக்கவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.