கொரோனாவை தொடர்ந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறியிருப்பது கரும்பூஞ்சை நோய். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் சிலருக்கு Black Fungus or Mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது.
பொதுவாக கொரோனா நோய் பாதிப்புக்கு ஆளாகும் நீரிழிவு நோயாளிகள் மீண்டு வர ஸ்டீராய்டு எனப்படும் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைகிறது. கொரோனாவில் இருந்து மீண்ட சர்க்கரை நோயாளிகள் சுற்றுச்சூழலில் உள்ள mucor-mycosis என்ற பூஞ்சை தொற்றுக்கு அதிகம் ஆளாகின்றனர்.
இவ்வகை கரும்பூஞ்சை தொற்றுக்கு ஆளாகும்போது கண்வலி,கண் வீக்கம், பின்னர் பார்வை இழப்பு ஏற்படுகிறது. சில நோயாளிகளுக்கு மூக்கில் ரத்தம் வருதல், பின்னர் மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நேரிடுகிறது.
சென்னை மற்றும் தமிழகத்தில் வெகு சில இடங்களில் அரிதாக காணப்பட்டு வந்த இந்த பாதிப்பு , தற்போது நாடு முழுக்க கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு 10 முதல் 20 மடங்கு அதிகரித்துள்ளது. இந்திய அளவில் ஏராளமானோர்
கரும்பூஞ்சைத் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனாவைக் கடந்து கரும்பூஞ்சைத் தொற்று அச்சமூட்டும் ஒன்றாக உருவாகிவருகிறது. இந்தநிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், ‘கரும்பூஞ்சைத் தொற்றை பெருந்தொற்று நோய் என்று அறிவிக்கவேண்டும். இந்த கரும்பூஞ்சை பாதிப்பு நீண்டகால நோய் பாதிப்புக்கு வழிவகுக்கும். கொரோனா பாதித்தவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கரும்பூஞ்சைத் தொற்றுக்கு கண் மருத்துவர், தொண்டை, மூக்கு, காதுகளுக்கான சிறப்பு மருத்துவர், பொது மருத்துவர், பல் மருத்துவர், நரம்பியல் மருத்துவர் ஆகியோர் கொண்டு சிகிச்சையளிக்கவேண்டிய தேவை உள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.