Home /News /national /

கொரோனா இழப்பீடு - விண்ணப்பங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழு வருகை

கொரோனா இழப்பீடு - விண்ணப்பங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழு வருகை

மாதிரி படம்

மாதிரி படம்

யாராவது போலியாக உரிமை கோரியிருப்பது தெரிய வந்தால், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 52-ன்படி நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்கலாம் - உச்சநீதிமன்றம்

    COVID-19 ex-gratia compensation: கொரோனா இழப்பீடு கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களை ஆய்வு செய்ய மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு மத்தியக் குழு விரைந்துள்ளது. நிவாரணத் தொகை வழங்குவதற்கான நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பதோடு, மாவட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆவணங்கள் சரிபார்ப்பின் உண்மைத் தன்மையையும் ஆராயும்.

    முன்னதாக, கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி விண்ணப்பிப்பதற்கான கால வரம்பை உச்சநீதிமன்றம் நிர்ணயித்தது.  கடந்த மார்ச் மாதம் இதுகுறித்து உத்தரவு பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம், கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவித் தொகை பெற விரும்பும் பயனாளிகளுக்கு,  காலவரம்பை நிர்ணயித்தது.

    உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

    20, மார்ச் 2022 முன்பு கொரோனா நோய்த் தொற்று  பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு, இழப்பீடு கோரி விண்ணப்பிக்க, 24, மார்ச் 2022-லிருந்து 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

    எதிர்காலத்தில் கோவிட்-19 பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை பொறுத்தவரை, இறந்த தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

    இழப்பீடு கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுத்து 30 நாட்களுக்குள் இழப்பீட்டை பட்டுவாடா செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

    எனினும், கடினமான சூழ்நிலையில் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க இயலாத உரிமை கோருவோர், குறைத் தீர்ப்புக் குழுவை அணுகி அந்தக் குழு வாயிலாக உரிமை கோரினால் அது, மனுவின் தன்மையின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட உரிமை கோருவோர் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் உரிமை கோரவில்லை என குறைத் தீர்ப்புக் குழுவால் கண்டறியப்பட்டால், தகுதியின் அடிப்படையில் அத்தகைய மனுக்களை பரிசீலிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், போலியான உரிமை கோருவதை இயன்றளவு குறைக்கும் விதமாக, உதவிக் கோரி வரும் விண்ணப்பங்களில் 5% விண்ணப்பங்களை முதற்கட்டமாக ஆய்வு செய்யலாம். இந்த ஆய்வின்போது யாராவது போலியாக உரிமை கோரியிருப்பது தெரிய வந்தால், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 52-ன்படி நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்தியா கொரோனா இறப்பு எண்ணிக்கை


    இந்தியாவில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக 5,21,656 பேர் இதுவரை இறந்துள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட கொரோனா உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதாகவும், உண்மையான எண்ணிக்கை குறைவாகக் கணக்கிடப்பட்டுள்ள தாகவும் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இத்தகைய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை மற்றும் முற்றிலும் தவறானவை என்று மத்திய அரசு பதிலளித்தது.

    அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து - கொரோனா இறப்பு போக்கு


    மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிமோனியா காய்ச்சல், மாரடைப்பு போன்ற காரணங்களால் உயிரிழந்ததாக சான்றிதழ் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் குடும்பத்தினரால் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டை பெற முடியாத சூழல் நிலவுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தமிழ்நாட்டில் மொத்த கொரோனா சார்ந்த இறப்புகளின் எண்ணிக்கை அரசு வெளியிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையான 12870க்கு மாறாக 108108 முதல் 126126 ஆக இருக்கக்கூடும் என்று அறப்போர் இயக்கம் முன்னதாக தனது ஆய்வில் தெரிய வந்ததாக கூறியது.

    தமிழகத்தில் வாழும் குடிவாசிகள், கொரோனா இழப்பீடு கோரி Covid Ex gratia Relief Application Form என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Corona, Corona death, Supreme court

    அடுத்த செய்தி