சோசியல் மீடியா, OTT தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - மத்திய அரசு விதித்த விதிமுறைகள் என்ன?

சோசியல் மீடியா, OTT தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - மத்திய அரசு விதித்த விதிமுறைகள் என்ன?

சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் மத்திய அரசு விதித்துள்ள வழிமுறைகள் என்ன என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

  • Share this:
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் சமூக ஊடக துஷ்பிரயோகம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சோசியல் மீடியா, டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் மற்றும் OTT தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. டிஜிட்டல் தளங்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் வைத்தே சில வழிகாட்டுதல்களை மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி வெளியிட்டது.

இதுவரை பெரிய கட்டுப்பாடுகள் இல்லாமல் இயங்கி வந்த OTT தளங்கள், டிவிட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் என அனைத்திற்கும் Information Technology [Guidelines for Intermediaries and Digital Media Ethics Code] 2021 என்ற பெயரில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல, பத்திரிகைகள் மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளை நிர்வகிக்கின்ற Press Council of India Act 1978 மற்றும் Cable Television Network Regulation Act 1995, ஆகியவை டிஜிட்டல் செய்தி நிறுவனங்களுக்கும் பொருந்துமாறு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளன. அதே போல் இதுவரை OTT தளங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் பெறத் தேவையில்லை என்றே விதிமுறைகள் இருந்து வந்தன. ஆனால், தற்போது வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அமலுக்கு வந்தால், OTT தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் தணிக்கைச் சான்றிதழ் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

https://twitter.com/PIB_India/status/1364882870876078092

இது தொடர்பாக  செய்தியாளர்களை சந்தித்த மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "டிஜிட்டல் தளங்களின் சாதாரண யூசர்களுக்கு அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், அவர்களின் உரிமைகளை மீறும் விஷயத்தில் பொறுப்புக்கூறல் கட்டளையிடுவதற்கும் விதிகளை கொண்டு வர வேண்டும்" என்று கூறினார்.

சமூக ஊடகங்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள் என்ன?

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79-ன் படி, சமூக ஊடங்கங்களை உபயோகிப்பவர்கள் பதிவிடும் சட்டவிரோதமான கருத்துக்களை கண்காணிக்க பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும், சமூக ஊடகங்களில், அவதூறு கருத்துக்களை முதலில் யார் பதிவிடுகின்றனர் என்பதை கண்டறியும் வசதியையும் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி, சமூக ஊடக தளங்கள் உட்பட இடைத்தரகர்கள் யூசர்களிடம் இருந்து புகார்களைப் பெறுவதற்கும், அதனை தீர்ப்பதற்கும் ஒரு முறையை நிறுவி அதன் மூலம் குறை தீர்க்கும் வழிமுறையை மத்திய அரசு நிறுவனங்களுக்கு பரிந்துரைத்துள்ளது. இதுபோன்ற புகார்களைக் கையாள்வதற்கு இந்த தளங்களில் ஒரு குறை தீர்க்கும் அதிகாரியை சோசியல் மீடியா நிறுவனங்கள் நியமிக்க வேண்டும். அவர்கள் புகாரை 24 மணி நேரத்திற்குள் ஒப்புக் கொள்ள வேண்டும். புகார் கிடைத்த 15 நாட்களுக்குள் அதைத் தீர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோத பதிவுகளை நீக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்ட 36 மணி நேரத்துக்குள் அவற்றை நீக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சமூக ஊடக தளம் ஹோஸ்ட் செய்யக்கூடாத 10 வகை பதிவுகளுக்கான விதிகளையும் மத்திய அரசு வகுத்துள்ளது. அவை, “இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மையை அச்சுறுத்தும் உள்ளடக்கம், வெளிநாட்டு நாடுகளுடனான நட்பு உறவுகள், அல்லது பொது ஒழுங்கு, அல்லது எந்தவொரு அறியக்கூடிய குற்றத்தின் ஆணைக்குழுவையும் தூண்டுவது அல்லது எந்தவொரு குற்றத்தையும் விசாரிப்பதைத் தடுப்பது அல்லது எந்தவொரு வெளிநாட்டையும் அவமதிக்கும் உள்ளடக்கம்" ஆகியவை இதில் அடங்கும்.

இதுதவிர சோசியல் மீடியாவில் ஒருவரது கணக்கு பிளாக் செய்யப்படும் பட்சத்தில், அவரது கணக்கு என்ன காரணத்திற்காக முடக்கப்படுகிறது என்ற முழு விவரத்தையும் யூசர்களுக்கு நிறுவனங்கள் வழங்க வேண்டும். புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நீக்கப்பட்ட பதிவுகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சமூக வலைத்தளங்கள் தொடர்பான விதிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நிர்வகிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகளால் தனிமனித கருத்து சுதந்திரம் இனி பறிபோகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

OTT மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகள்:

NETFLIX, Amazon Prime போன்ற OTT தளங்கள், யூடியூப் மின்னணு ஊடகங்கள், அவற்றில் செய்தி வெளியிடுபவர்கள் ஆகியோருக்கும் சில நடத்தை நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு, ஓ.டி.டி தளங்கள், குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை யார் யார் பார்க்கலாம் என்பதற்காக வயது அடிப்படையில் 5 பிரிவுகளாக வகைப்படுத்த வேண்டும். யு பிரிவு (அனைவரும் பார்க்கலாம்), யு/ஏ 7+ (பெற்றோர் வழிகாட்டுதலுடன் 7 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கலாம்), யு/ஏ 13+, யு/ஏ 16+, ஏ (வயது வந்தோர் மட்டும்) ஆகிய 5 பிரிவுகளாக வகைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

இது தவிர, யு/ஏ 13+ மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளுக்கு உட்பட்ட நிகழ்ச்சிகளை பெற்றோர் முடக்கி வைக்கும் வசதி அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், அது எதைப்பற்றியது, எந்த வயதினர் பார்க்கலாம் என்பதை குறிப்பிட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுபோல், மின்னணு ஊடகங்களில் செய்தி வெளியிடுபவர்கள், இந்திய பத்திரிகை கவுன்சிலின் பத்திரிகையாளர்களுக்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கேபிள் டி.வி.நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டத்தையும் பின்பற்ற வேண்டும் என்பன போன்ற விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: