• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பண்டோரா பேப்பர்ஸ் -முறைகேடு முதலீடு சர்ச்சையில் இந்திய பிரபலங்கள்: கூட்டுக் குழு விசாரணை!

பண்டோரா பேப்பர்ஸ் -முறைகேடு முதலீடு சர்ச்சையில் இந்திய பிரபலங்கள்: கூட்டுக் குழு விசாரணை!

பண்டோரா பேப்பர்ஸ்

பண்டோரா பேப்பர்ஸ்

‘பண்டோரா பேப்பர்ஸ்' என்ற பெயரிலான அந்தப் பட்டியலில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் நீரவ் மோடி உட்பட மொத்தம் 380 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

  • Share this:
    முறைகேடாக முதலீடு செய்து கோடிக்கணக்கில் சொத்துக் குவித்ததாக 380 இந்தியர்கள் உள்ளிட்ட உலக தலைவர்களின் பட்டியல் பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் தலைமையிலான குழு கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பலரும் வெளிநாடுகளில் முறைகேடாக கோடிக்கணக்கில் முதலீடு செய்து, சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாகப் பட்டியல் ஒன்றை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது.

    `பண்டோரா பேப்பர்ஸ்' என்ற பெயரிலான அந்தப் பட்டியலில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் நீரவ் மோடி உட்பட மொத்தம் 380 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 14 சர்வதேச பெரு நிறுவனங்களிலிருந்து கசிந்த சுமார் 1 கோடியே 90 லட்சம் கோப்புகளைக் கொண்டு 600க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களால் புலனாய்வு செய்யப்பட்டு, பண்டோரா பேப்பர்ஸ்' வெளியிடப்பட்டிருக்கிறது.

    பனாமா பேப்பர்ஸ்

    2016-ம் ஆண்டு 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் முக்கிய ஆவணங்கள் வெளியாகி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி மற்றும் டி.எல்.எஃப் நிறுவன தலைவர் கே.பி.சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் இருந்தன. இந்த சர்ச்சையை தொடர்ந்து, பிரிட்டனின் வர்ஜின் தீவிகளிலிருந்த நிறுவனத்தை சச்சின் டெண்டுல்கர் கலைத்து விட்டதாக பண்டோரா பேப்பர்சில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: முறைகேடான நிதி முதலீடு- வெளியான பண்டோரா ஆவணம்: சச்சின் உள்ளிட்ட இந்தியர்களும் சிக்கினர்!

    வங்கி மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பியோடிய நிரவ் மோடியின் சகோதரி, அவர் தப்பி செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறக்கட்டளை தொடங்கியதாகவும் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

    வெளிநாட்டு நிறுவனம் பெயரில் விமானம்


    பொருளாதார குற்றங்கள் புரிந்ததாக, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை வளையத்தில் உள்ளவர்கள், வரி ஏய்ப்பாளர்களின் புகலிடங்களாக கருதப்படும் பெலிஸ், குக் தீவுகள், வெர்ஜின் தீவுகள் உள்ளிட்ட இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு செலுத்த முடியாது என அறிவித்தவர்கள், தங்கள் சொத்துக்களின் பெரும் பகுதிகளை வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.

    பொருளாதார குற்றங்கள் புரிந்த ஒருவர், தன் வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரில் விமானம் வாங்கியிருப்பதாகவும் பண்டோர பேப்பர்சில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: கொரோனாவில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு: அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம்!

    வரி ஏய்ப்பைப் பிரதானமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இந்தப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கென்யா ஜனாதிபதி உஹுரு, செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் பாப் இசை பாடகி ஷகிரா, எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர்.

    கூட்டுக்குழு விசாரணை

    இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொருளாதார முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்த பட்டியலை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது.

    இந்தத் தகவல்கள் படிப்படியாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களில் ஒரு சில இந்தியர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்படி விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை கண்காணிக்க  கூட்டுக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.  விசாரணையை மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் தலைமையில் நேரடி வரிகள் வாரியம், அமலாக்கத் துறை, ரிசர்வ் வங்கி, நிதி புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் கொண்ட குழு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: