கொரோனா தடுப்பூசி விலை உயர்த்தப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் ஏற்படுள்ள நிலையில், தடுப்பூசி விலையை குறைக்குமாறு மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு மே 1 ஆம் தேதி முதல் 3ஆம் கட்ட தடுப்பூசி பணிகளை தொடங்குகிறது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படவுள்ளது. மேலும், தடுப்பூசி திட்டத்தை எளிமைப்படுத்தி பரவலாக்கும் வகையில், மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் தாங்களாகவே தடுப்பூசி கொள்முதலை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்கள் 50 சதவீத உற்பத்தியை மத்திய அரசுக்கும், மீதமுள்ள 50 சதவீதத்தை மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கும் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம், மற்றும் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தியாளரான பாரத் பயோடெக் நிறுவனங்கள், புதிய விலையை நிர்ணயித்து அறிவித்தன.
அதன்படி, கோவேக்சின் தடுப்பூசி ஒரு டோஸ், மாநிலங்களுக்கு ரூ.600க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் ரூ.1,200 க்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கோவிஷீல்டு தடுப்பூசி மாநிலங்களுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 விலையில் வழங்கப்படும் என விலை நிலவரத்தை வெளியிட்டன. அதேநேரம் மத்திய அரசுக்கு ரூ.150 என்ற விலையிலேயே இரு தடுப்பூசிகளும் வழங்கப்படும் எனவும் நிறுவனங்கள் அறிவித்தன.
இந்நிலையில், மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசியின் விலை அதிகமாக இருப்பதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அதிக லாபம் பார்க்கும் நேரம் இதுவல்ல என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன் வைத்தன.
இதனைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி விலை தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் நேற்று உயர்மட்டக்குழு விவாதித்தது. இதில் தடுப்பூசி விலையை குறைக்குமாறு சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால், தடுப்பூசியின் விலையை குறைக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, புதிய விலையையும் அவர்கள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Must Read : தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 94 பேர் மரணம்
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கவும், ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கவும் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, COVID-19 Second Wave, Covid-19 vaccine