Corona Vaccine : மாநிலங்களிடம் கையிருப்பில் உள்ள தடுப்பூசி எவ்வளவு? - மத்திய அரசு விளக்கம்

கொரோனா தடுப்பூசி - மாதிரி படம்

33,80,590 தடுப்பூசிகள் அடுத்த 3 நாள்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படஉள்ளன.

  • Share this:
    மாநிலங்களின் கையிருப்பில் இன்னும் 2.14 கோடிக்கும் மேலான கொரோனா தடுப்பூசிகள் உள்ளன. மேலும் 33,80,590 தடுப்பூசிகள் அடுத்த 3 நாள்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படவுள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை 7 மணி வரையிலான தடுப்பூசி கையிருப்பு நிலவரம் குறித்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 86.16 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. உலகளவில் ஒரேநாளில் 86 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது இதுவே முதன்முறை. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 28.87 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நேரடிக் கொள்முதல் மூலம் உள்பட மொத்தம் 29.35 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வீணானவை உள்பட மொத்தம் 27,20,14,523 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    மாநிலங்களின் கையிருப்பில் இன்னும் 2.14 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் உள்ளன. மேலும் 33,80,590 தடுப்பூசிகள் அடுத்த 3 நாள்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 21ஆம் தேதி முதல் புதிய தடுப்பூசி திட்டத்தின் படி, மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

    Must Read : டெல்டா வகை வைரஸ்க்கு எதிராக, கொரோனா தடுப்பூசிகள் பெரியளவில் பலன் அளிக்கவில்லை -உலக சுகாதார நிறுவனம்

    இந்நிலையில், புதுச்சேரியை 100 சதவீத தடுப்பூசி போடப்பட்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கோடு புதுச்சேரி சுகாதாரத்துறை தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளது. கடந்த 6 நாட்கள் தடுப்பூசி திருவிழாவில் மட்டும் 94,977 பயனாளிகள் தடுப்பூசி போட்டுள்ளனர். அங்கே இதுவரை மொத்தமாக 4,31,781 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. புதுக்குப்பம், தனிக்குப்பம், சின்ன கரையாம்புத்தூர், M.புதுக்குப்பம், இருளர் காலனி, மொளப்பாக்கம் ஆகிய 6 கிராமங்களில் 100 சதவீத தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை செயலாளர் அருண் தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published: