Twitter : இந்தியாவின் சட்ட கொள்கைகள் குறித்து பேச டிவிட்டர் நிறுவனத்திற்கு உரிமை இல்லை - மத்திய அரசு கண்டனம்

ட்விட்டர்

இந்தியாவில் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது கவலையளிப்பதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், சுற்றி வளைத்துப் பதில் சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். டிவிட்டர் நிறுவனம் வெறும் சமூக ஊடக தளம் மட்டும்தான் எனவும், இந்தியாவின் சட்ட கொள்கைகள் குறித்து பேச அந்நிறுவனத்துக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் டிவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் கடந்த 25ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளன.

    மத்திய பாஜக அரசுக்கு எதிரான காங்கிரஸ் தயாரித்த 'டூல்கிட்' என்று பாஜக-வினர் எழுப்பிய பிரச்னை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

    கொரோனா வைரஸை 'மோடி வைரஸ் என்று குறிப்பிட வேண்டும் என்றும்', 'கும்பமேளா தான் கொரோனா இரண்டாவது அலைக்கு காரணம் என்று கூற வேண்டும்' என்றும் 'டூல்கிட்' ஒன்றை காங்கிரஸ் கட்சி தயாரித்துக் கொடுத்ததாக பாஜக-வின் செய்தித்தொடர்பாளர் சாம்பித் பத்ரா ட்விட்டரில் வெளியிட்டார்.

    ஆனால், அது போலியானது என்று காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. அதையடுத்து, சாம்பித் பத்ராவின் ட்வீட்டை உண்மைக்கு மாறானது, என்று ட்விட்டர் டேக் செய்தது. ,இது குறித்து டெல்லியில் உள்ள டிவிட்டர் இந்தியா அலுவலகத்தில் காவலர்கள் விசாரணை நடத்தினர்.

    இந்த சூழலில், அறிக்கை வெளியிட்டுள்ள டிவிட்டர் நிறுவனம், இந்திய சட்டங்களுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாகவும், அதேநேரம் உலகம் முழுவதும் உள்ளபடி வெளிப்படையான கொள்கைகளை கடைபிடிப்போம் என்றும் உறுதி அளித்துள்ளது.

    சட்ட விதிகளுக்கு உட்பட்டு கருத்து சுதந்திரத்தை காப்போம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. காவலர்களின் விசாரணை தங்களை அச்சுறுத்தும் ஒரு வகையான உத்தி என விமர்சித்துள்ள டிவிட்டர், மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் விதத்தில் புதிய விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுடன் பேச்சுவார்தை நடத்துவோம் என உறுதி அளித்துள்ளது.

    மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு தடை கோரி டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளது. தனிமனித உரிமையை மீறும் வகையில் விதிமுறைகள் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள வாட்ஸ்அப், பகிரப்படும் செய்தியை முதன்முதலில் பதிவிட்டவரை கண்டு பிடிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, தவறான தகவல்களை தொடர்ந்து பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறான கருத்தை தொடர்ந்து போடுபவரின் பதிவுகள், பொதுமக்களை அடையாத வகையில் பார்த்துக் கொள்வோம் என்றும், அடுத்தகட்டமாக பயனர் பிற பதிவுகள் போடுவதை தடுக்கவும் செய்வோம் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

    மேலும், அப்பக்கத்தின் தவறான தகவல்களின் எண்ணிக்கை அல்லது விவரங்களும் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கு காண்பிக்கப்படும் என்பதால், அவர்களுக்கு அப்பக்கம் குறித்த தெளிவான பார்வை கிடைக்கும் என்றும் பேஸ்புக் கூறியுள்ளது.

    இந்த நிலையில், சுற்றி வளைத்துப் பதில் சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என மத்திய அரசு டிவிட்டர் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், டிவிட்டர் நிறுவனம் வெறும் சமூக ஊடக தளம் மட்டும்தான் எனவும், இந்தியாவின் சட்ட கொள்கைகள் குறித்து பேச அந்நிறுவனத்துக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Must Read : கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே வைரஸ் பரவும் - மத்திய அரசு

     

    சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுங்கள் என்றும், சட்டத்தை உருவாக்குவதும், கொள்கைகளை வகுப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    Published by:Suresh V
    First published: