ஹோம் /நியூஸ் /இந்தியா /

அரசை கடுமையாக விமர்சித்த திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது நடவடிக்கை: பின்வாங்கியது மத்திய அரசு

அரசை கடுமையாக விமர்சித்த திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது நடவடிக்கை: பின்வாங்கியது மத்திய அரசு

மஹுவா மொய்த்ரா

மஹுவா மொய்த்ரா

மொய்த்ரா விமர்சனம் செய்தது முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைத் தானே தவிர தற்போது பதவியிலிருப்பவரை அல்ல என்பதுதான் மொய்த்ராவுக்குக் கிடைத்த சட்ட ரீதியான சாதகம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா. மத்திய அரசின் கொள்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வரும் மஹுவா, நேற்று நாடாளுமன்ற உரையில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயைக் குறித்த விமர்சனத்தையும் முன் வைத்தார்.

  முன்னாள் தலைமை நீதிபதியையே விளாசித்தள்ளினார் மஹுவா மொய்த்ரா. இவர் மீது உரிமை மீறல் பிரச்சனையைக் கொண்டு வந்து அவை நடவடிக்கைகளிலிருந்து இவரை தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் இப்போது நடவடிக்கை வேண்டாம் என்று பின் வாங்கியுள்ளது, காரணம் சட்டம் மஹுவா மொய்த்ராவுக்குச் சாதகமாக உள்ளது.

  என்.டி.டிவி உட்பட பல்வேறு செய்தி ஊடகங்கள் மத்திய அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பின் வாங்கியிருப்பதாகத் தெரிவிக்கின்றன.

  காரணம் மொய்த்ரா விமர்சனம் செய்தது முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைத் தானே தவிர தற்போது பதவியிலிருப்பவரை அல்ல என்பதுதான் மொய்த்ராவுக்குக் கிடைத்த சட்ட ரீதியான சாதகம்.

  அன்று மொய்த்ரா பேசும் போது, “விவசாயிகள், மாணவர்கள், ஷாஹீன் பாக் போராட்டத்தில் கலந்துகொண்ட வயதான பெண்கள் உட்பட எதிர்ப்பவர்கள் எல்லாரையும் கோழைகள் எனவும் தீவிரவாதிகள் எனவும் அடையாளப்படுத்துகிறார்கள். இதுதான் இந்த அரசின் வீரமா?இந்திய மக்கள் படுகின்ற துன்பங்களுக்கு காரணம்,அரசு அதனை கைவிட்டதால் மட்டும் அல்ல. ஜனநாயகத்தின் தூண்களான ஊடகம் மற்றும் நீதித்துறையும்தான் அதனை கைவிட்டுவிட்டது.

  புனிதமாக கருதப்படும் நீதித்துறை இனி புனிதமாக இருக்க முடியாது. பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவர் எப்போது இந்த நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்துகொண்டு, தன் மீதான குற்றச்சாட்டை தானே விசாரித்துக் கொண்டாரோ, அதில் குற்றம் செய்யாதவராக தன்னை அறிவித்துக் கொண்டாரோ, பணி ஓய்வு பெற்ற மூன்றே மாதங்களில் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டாரோ அப்போதே அதன் புனிதம் சிதைந்துவிட்டது.

  அரசின் செயல்பாடுகளை கேள்வி கேட்டதற்காக, அரசு விவகாரங்களில் கருத்து தெரிவித்ததற்காக காவல்துறையின் துன்புறுத்தலை மக்கள் எதிர்கொள்கிறார்கள். கோழைகள் அதிகாரத்தின் பொய்யான துணிச்சலுக்குப் பின்னாலும், வெறுப்பின் பின்னாலும், மதவெறியின் பின்னால் மறைந்து கொள்கிறார்கள். இதனை அவர்கள் தைரியம் என்கிறார்கள்.

  விவசாயச் சட்டங்களுக்கு எதிராக 90 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராடிவருகிறார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய அரசு யாரையும் நியமிக்கவில்லை. அந்த வேளாண் சட்டங்களை இந்த அரசின் கூட்டணி கட்சிகள் கூட எதிர்த்திருக்கின்றன. மத்திய அரசு அறத்தைவிட மிருகத்தனத்தையே நம்புகிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.

  இவரது இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அவைத்தலைவரிடம் முன் அனுமதி பெறாமல் உயர் பதவிகளில் இருப்பவர்களை விமர்சிக்க முடியாது என்றும் இது உரிமை மீறல் என்றும் ஆளும் கட்சித் தரப்பில் எதிர்ப்புக் காட்டப்பட்டது. இந்நிலையில் உரிமை மீறல் விவகாரம் இவர் மீது எழுப்பப்பட சட்டப்பூர்வ சாத்தியமில்லை என்பதால் மத்திய அரசு பின் வாங்கியதாக தெரிகிறது.

  ஆனால் மஹுவா மொய்த்ரா கூறும்போது, உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டால் அதை நான் சிறந்த பாராட்டாகவே கருதுகிறேன், இந்தியாவின் இருண்ட காலத்தில் உண்மையைப் பேசியதற்காக நடவடிக்கை என்றால் அது எனக்கு அளிக்கப்பட்ட கவுரவமே என்று கூறியுள்ளார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: BJP, Mahua Moitra, Ranjan Gogai