ஹோம் /நியூஸ் /இந்தியா /

’ஜெய் ஸ்ரீராம்’ போர் முழக்கமாகிவிட்டது! மோடியிடம் கொந்தளிக்கும் பிரபல இயக்குநர்கள்

’ஜெய் ஸ்ரீராம்’ போர் முழக்கமாகிவிட்டது! மோடியிடம் கொந்தளிக்கும் பிரபல இயக்குநர்கள்

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

அரசுக்கு எதிராக குரல் எழுப்பினால் அவர்கள் தேச விரோதி என்றோ நகர்புற நக்சல் என்றோ அடையாளப்படுத்தப்பட்டு சிறையிலடைக்கக் கூடாது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  உங்கள் தலைமையில் மத்தியில் ஆட்சியமைந்த பிறகு, மத வெறுப்பிலான கும்பல் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. உடனே அதனை நிறுத்தவேண்டும் என்று இந்தியாவின் பிரபலமான எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

  பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் மதத்தின் பெயரால் கும்பல் தாக்குதல் நடைபெற்றுவருகின்றன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்தநிலையில், இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளான எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என 49 பேர் இந்தச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மோடிக்கு கூட்டாகச் சேர்ந்து கடிதம் எழுதியுள்ளனர்.

  அதில், இயக்குநர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், கௌதம் கோஷ், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்டோரும் அடக்கம்.

  அந்தக் கடிதத்தில், ‘நம்முடைய அன்புக்குரிய நாட்டில் சமீபகாலமாக நடைபெற்றுவரும் துயர சம்பங்கள் அமைதியை விரும்பும் எங்களுக்கு பெரும் வருத்தத்தைத் தருகிறது. நம்முடைய அரசியலமைப்புச் சட்டம், இந்தியா ஒரு மதச்சார்பற்ற சோசலிச ஜனநாயக குடியரசு இங்கே, எல்லா மதம், மொழி, பாலினம், சாதியைச் சேர்ந்த அனைவரும் சமம் என்று வரையறுக்கிறது. எனவே, அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை எல்லா குடிமகன்களுக்கும் உறுதிப்படுத்தவேண்டும்.

  இயக்குநர்கள் எழுதிய கடிதம்

  கோரிக்கைகள்:

  முஸ்லீம்கள், தலித் மற்றும் பிற சிறுபான்மையினர்கள் மீது நடத்தப்படும் கும்பல் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். 2016-ம் ஆண்டு தலித் மக்களுக்கு எதிராக 840 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்ற அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகமான என்.சி.ஆர்.பியில் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அதைத்தவிர, ஜனவரி 1, 2009-ம் ஆண்டிலிருந்து அக்டோபர் 29, 2018-ம் ஆண்டு வரையில் 254 மதவெறுப்பு வன்முறைச் சம்பங்கள் நடைபெற்றுள்ளன. அதில், 91 பேர் உயிரிழந்துள்ளனர். 579 பேர் காயமடைந்துள்ளனர்.

  இயக்குநர்கள் எழுதிய கடிதம்

  மத வெறுப்பு வன்முறைச் சம்பவத்தில் இந்திய மக்கள் தொகையில் 14% மட்டும் உள்ள இஸ்லாமியர்கள், 62% வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அதேபோல, இந்திய மக்கள் தொகையில் 2% மட்டும் உள்ள கிறிஸ்துவர்கள், 14% வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதில், 90% வழக்குகள் உங்களது அரசு எப்போது ஆட்சிக்கு வந்ததோ 2014-ம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு நடைபெற்றுள்ளது.

  இயக்குநர்கள் எழுதிய கடிதம்

  இதுபோன்ற கும்பல் கொலைகளை நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்டித்தீர்கள். ஆனால், அது போதாது. இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது உண்மையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் பினை இல்லாத குற்றங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

  இயக்குநர்கள் எழுதிய கடிதம்

  அனைவரும் பின்பற்றத்தக்க அந்த தண்டனை உடனடியாக அமலுக்கு வரவேண்டும். கொலைக்குற்றத்துக்கு பரோல் இல்லாத ஆயுள்சிறை தண்டனையாக இருக்கும்போது கும்பல் கொலைக்கு ஏன் அந்தத் தண்டனை இல்லை. எந்த குடிமகன்களும் அவர்களது சொந்த நாட்டில் அச்சத்துடன் வாழக் கூடாது.

  துரதிருஷ்டவசமாக ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தை இன்று ஆத்தரமூட்டும் போர் முழக்கமாக மாறி சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை உருவாக்கி பல்வேறு பகுதிகளில் அதன் பெயரில் கும்பல் தாக்குதல் நடைபெற காரணமாகியுள்ளது. மதத்தின் பெயரால் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பங்கள் நடைபெறுவது அதிர்ச்சியானது. ராம் என்ற பெயர் இந்தியாவின் பெரும்பான்மையினருக்கு புனிதமான பெயர். ராமின் பெயர் தீட்டாகிவிடும் வகையில் நடைபெறும் செயல்களை நீங்கள் தடுத்து நிறுத்தவேண்டும்.

  எதிர்ப்பு இல்லாமல் எந்த ஜனநாயகமும் இல்லை. அரசுக்கு எதிராக குரல் எழுப்பினால் அவர்கள் தேச விரோதி என்றோ நகர்புற நக்சல் என்றோ அடையாளப்படுத்தப்பட்டு சிறையிலடைக்கக் கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19, பேச்சுரிமையை பாதுகாக்கிறது. அரசை எதிர்ப்பது என்பது அதில் ஒரு பகுதி.

  ஆளும் அரசை விமர்சிப்பது என்பது நாட்டை விமர்சிப்பது என்று ஆகாது. எந்த ஆளும் அரசையும் நாட்டுடன் சமப்படுத்த முடியாது. அது, அந்த நாட்டில் உள்ள கட்சிகளில் ஒன்று அவ்வளவுதான். எனவே, அரசுக்கு எதிரான நிலைப்பாடு என்பது தேச விரோதம் கிடையாத்து. எங்கே, எதிர்ப்புகள் நசுக்கப்படவில்லையோ, அங்கேதான் வலிமையான தேசத்தை உருவாக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: Modi Cabinet