டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மூன்று மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான முதல் வெற்றியை பாகிஸ்தான் பதிவு செய்தது. இப்போட்டியின் முடிவு பல்வேறு வகையில் தொடர் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. சிலர் ஷமியை குறை கூறி வருகின்றனர். சிலர் மத ரீதியில் பிரித்து பேசுகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றியை ஆகோ ஓகோவென புகழ்ந்தும், இந்தியாவை சிறுமைப்படுத்தும் விதத்திலும் சிலர் பதிவிட்டதையும் காண முடிந்தது. அதே நேரத்தில் பாகிஸ்தான் வெற்றியை சிலர் கொண்டாடியும் உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவின் பிச்பூரி பகுதியில் உள்ள ராஜா பல்வந்த் சிங் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மூவர் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பின்னர் இந்தியாவை சிறுமைப்படுத்தும் விதமாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Also Read:
மகன் ஆர்யனை கைது செய்த NCB அதிகாரி ஷாருக்கானை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியவர் – எதற்கு?
இதன் பேரில் விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் அந்த மூன்று மாணவர்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கடந்த திங்களன்று சம்பந்தப்பட்ட மாணவர்கள் மூவரும் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனிடையே சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து ஜக்தீஷ்புரா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மத மோதலை தூண்டும் விதமாக செயல்பட்டது (153 ஏ), 2008 ஐடி சட்டப்பிரிவு, சைபர் தீவிரவாதம் (66 எஃப்) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது தேச துரோக பிரிவும் சேர்க்கப்படும் என தெரிகிறது.
Also read:
போலி சமூக வலைத்தள கணக்குகளின் மூலம் மத மோதலை தூண்ட முயற்சி – போலீஸ் விளக்கம்
கைதான மாணவர்கள் அர்ஷீத் யூசுப், இனாயத் அல்தஃப் ஷேக் ஆகியோர் மூன்றாம் ஆண்டும், சவுகத் அகமது கனாய் என்ற மாணவர் நான்காம் ஆண்டும் படித்து வரும் பொறியியல் மாணவர்கள் ஆவார்கள்.
இதனிடையே பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். இந்த மூன்று மாணவர்கள் தவிர்த்து பரேலியைச் சேர்ந்த மூவரும், லக்னோவில் ஒருவரும் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதற்காக கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.