• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ப.சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் வருகை: 2 மணி நேரத்தில் ஆஜராக நோட்டீஸ்!

ப.சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் வருகை: 2 மணி நேரத்தில் ஆஜராக நோட்டீஸ்!

ப. சிதம்பரம் (கோப்புப் படம்)

ப. சிதம்பரம் (கோப்புப் படம்)

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க இன்று வலியுறுத்த சிதம்பரம் தரப்பில் திட்டமிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 24 மணி நேரத்தில் 3-வது முறையாக முகாமிட்டுள்ளனர். 

மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது, கடந்த 2007-ம் ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது. இதற்காக நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை முறைகேடாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி உதவியதாகவும், அதற்கு ஈடாக லஞ்சம் தரப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தியது. பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இதையடுத்து முன் ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் உடனே மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவரது தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரினார். இதனை தலைமை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து, மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு நீதிபதியிடம் இன்று முறையிட உள்ளதாக கபில்சிபல் தெரிவித்தார்.

ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவரை கைது செய்யும் முயற்சியில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் உள்ள சிதம்பரம் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு சென்றனர். அப்போது அவர் அங்கு இல்லாததால் திரும்பி வந்துவிட்டனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகளும் சிதம்பரம் வீட்டிற்கு சென்றுவிட்டு, அவர் இல்லாததை அறிந்து வெளியேறினர்.
இந்நிலையில் இரவு 11.30 மணியளவில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போதும் சிதம்பரம் இல்லாததால் அடுத்த 2 மணி நேரத்திற்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று விசாரணை அதிகாரியின் நோட்டீஸை ஒட்டிவிட்டு புறப்பட்டனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் என்பதால் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிப்பதற்கான அனுமதியை, உள்துறை அமைச்சகத்திடம் இருந்து சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் கடந்த ஆண்டே பெற்றுள்ளன. எனவே, மேல்முறையீடு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் பின்னடைவு ஏற்படும் பட்சத்தில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவதை தவிர்க்க முடியாது.

இந்நிலையில், சிபிஐ அமைப்புக்கு சிதம்பரத்தின் வழக்கறிஞர் அர்ஷீப் சிங் குரானா கடிதம் எழுதியுள்ளார். அதில், எந்த சட்டப்பிரிவின் அடிப்படையில், 2 மணிநேரத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது என்பது குறித்து நோட்டீஸில் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போது 3-வது முறையாக காலை 8 மணியளவில் ப.சிதம்பரம் வீட்டிற்கு மீண்டும் சிபிஐ அதிகாரிகள் வந்தனர்.

Also see... சாதனை நாயகன் வாஜ்பாய்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: