மேகதாது அணை தொடர்பான விஷயத்தில் தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பின்பே முடிவு எடுக்கப்படும் என்று கூறிய காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்துக்கு தர வேண்டிய 30 டிஎம்சி தண்ணீரை திறந்து விடும்படியும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலால் கடந்த சில மாதங்களாக வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடந்து வந்தது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று நேரில் கூடியது. மத்திய நீர்வளக் குழு ஆணையர் எஸ்.கே. ஹல்கர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் பொதுப்பணிச் செயலராக உள்ள சந்தீப் சக்சேனா பங்கேற்றார். இவருடன் காவிரி தொழில்நுட்ப பிரிவு அதிகாரி சுப்ரமணியமும் பங்கேற்றார்.
அந்தக் கூட்டத்தின் அலுவல் குறிப்பேட்டில் மேகதாது அணை கட்டும் விவகாரமும் இடம்பெற்று இருந்தது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. கர்நாடக அரசு அதிகாரிகள் மேகதாது அணை விவகாரம் குறித்தை வலியுறுத்தினர். இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடைமடை பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவொரு புதிய அணையையும் கட்ட முடியாதென்பதையும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் இதுகுறித்து இடம்பெற்றிருக்கும் சில அம்சங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் இருப்பதையும் விளக்கிய தமிழக அரசு அதிகாரிகள், மேகதாது அணை விவகாரத்தை இந்த கூட்டத்தில் ஆலோசிக்கக் கூடாதென வலியுறுத்தினர். தமிழகத்திற்கு ஏற்கனவே தரப்பட வேண்டிய நிலுவை தண்ணீரின் அளவுகள் குறித்த புள்ளி விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டது. அந்த தண்ணீரை வழங்க உத்தரவிடும்படியும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
கூட்டத்தில், காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என்று தமிழக அரசு வைத்த கோரிக்கைக்கு கர்நாடகா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் கூறுகையில், சாதாரண கால கட்டங்களில் 86.38 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் கடந்த ஜுன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரின் அளவு இன்னும் பாக்கி இருக்கிறது.
இதன் விபரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தரப்பட வேண்டிய தண்ணீரின் அளவு 30.6 டி.எம்.சி. என கணக்கீடு செய்யப்பட்டு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலுவை அளவு தண்ணீர் குறித்து ஆலோசித்து வரும் காவிரி ஒழுங்குமுறை குழு கூட்டத்தில் இந்த நிலுவைத் தண்ணீர் குறித்த அடுத்தடுத்த விபரங்கள் முறைப்படுத்தப்படும். மேகதாது அணை விவகாரம் இன்றைய ஆலோசனையில் இடம்பெறுவதாக இருந்தது. உறுப்பு மாநிலங்களுக்கு இடையில் இதுகுறித்த ஒருமித்த கருத்து எதுவும் ஏற்படவில்லை.
இந்தத் திட்டம் குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மேலாண்மை ஆணையத்துக்கு உள்ளது. அதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் களையப்பட வேண்டும். இந்த மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்பட வேண்டும். எனவே இது குறித்த மேலதிக விபரங்கள் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அதன்பின் முடிவெடுக்கப்படும். தற்போதைக்கு இந்த விவகாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Must Read : பள்ளிகளில் 6 மணி நேரம் மட்டுமே வகுப்புகள் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழகம் சார்பில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகா சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதனால் அந்த திட்டம் குறித்த ஆலோசனையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.