Home /News /national /

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவில்

திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கொரோனா 3ஆவது அலையை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் இல்லை என்றால் பொது சுகாதார திட்டத்தின் கீழ் அபராதம் அல்லது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கொரோனா பரவல் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நோய் பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், மீண்டும் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தற்போது 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ஆர்ஜித சேவா, கல்யாணோட்சவம், ஊஞ்சல் சேவா, தோலாட்சவம், சகஸ்ர தீபாலன் கார் சேவா ஆகியவற்றிற்கும் டிக்கெட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருகை குறைவாக காணப்பட்டது.

    பக்தர்கள் வசதிக்காக இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கொரோனா பரவல் முழுவதும் கட்டுக்குள் வந்த பின்னரே இலவச தரிசனத்திற்கு அனுமதி தருவது பற்றி முடிவு செய்யப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

    இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் கூடுதலாக 3,000 என்ற எண்ணிக்கையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாள்தோறும் 8,000 டிக்கெட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    Must Read : திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலையின் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்!

    இதனால், ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதன்படி, கடந்த திங்கள் கிழமை, 20,609 பக்தர்கள் வருகை தந்ததாகவும், அவர்களில் 10,117 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கை எண்ணப்பட்டது. அதில் 2 கோடியே 58 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட குறைவாக இருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பத்மாவதி விருந்தினர் மாளிகையில், கவுஸ்துபாம், எம்பிசி, சிஆர்ஓ, அலுவலகத்தில் அறைகள் எளிதில் கிடைப்பதாகவும், இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: CoronaVirus, Mask, Tirumala Tirupati, Tirupati

    அடுத்த செய்தி