7 கேள்விகள்: 9 நீதிபதிகள் - வழிபாட்டுத்தலங்களில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தொடங்குகிறது விசாரணை

7 கேள்விகள்: 9 நீதிபதிகள் - வழிபாட்டுத்தலங்களில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தொடங்குகிறது விசாரணை
உச்ச நீதிமன்றம்
  • News18 Tamil
  • Last Updated: February 10, 2020, 11:13 PM IST
  • Share this:
சபரிமலை உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பெண்கள் வழிபாடு நடத்துவது தொடர்பான விசாரணையை, 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் 7 கேள்விகளுக்கு இந்த அமர்வு விடைகாணும் என்றும் கூறியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது சபரிமலை மட்டுமின்றி மசூதிகள் மற்றும் பார்சி வழிபாட்டுத்தலங்களிலும் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு கோரியது. நீதிபதிகள் அமர்வு மற்ற மத விவகாரங்கள் குறித்து விசாரிக்க முடியாது என்றும் வாதம் எழுந்தது. இதுகுறித்து விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அப்போது, சபரிமலை மட்டுமின்றி அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க தடையில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டிய 7 முக்கிய கேள்விகளையும் உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது.


மதவிவகாரங்களில் நீதிமன்றங்கள் எந்த அளவுக்கு தலையிட அரசியல்சாசனம் அனுமதிக்கிறது?

அரசியல்சட்டம் பிரிவு 25-ல் இந்து மதத்தின் பிரிவுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளதன் பொருள் என்ன?

மதம் சார்ந்த நம்பிக்கைகள் அரசியலமைப்புச் சட்டம் 26-வது பிரிவின் பாதுகாப்பு வரம்புக்குள் வருமா?ஒரு மதத்தை சாராதவர்கள், பிற மதத்தில் கடைபிடிக்கப்படும் சடங்குகள், நம்பிக்கை, வழிபாட்டு முறைகள் குறித்து பொதுநல மனுக்கள் மூலம் கேள்வி எழுப்ப முடியுமா?

மதச் சுதந்திரத்தின் நோக்கம் என்ன?

மதச் சுதந்திரத்துக்கும், மதநம்பிக்கைகளின் சுதந்திரத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் என்ன?

மதச் சுதந்திரத்தைப் பின்பற்றுவதில் உள்ள அறம் என்ன?

என்ற 7 கேள்விகள் குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வரும் 17ஆம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பெண்களின் வழிபாட்டு உரிமை குறித்து விசாரிக்க உள்ள 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷன், எல் நாகேஸ்வரராவ், எம்.எம். சந்தான கவுடா, எஸ்.ஏ. நஸீர், ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய், சூர்யகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Also see:

First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்