பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலுக்கு வளர்ந்த நாடுகளை குற்றம் சாட்டிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், வளர்ந்த நாடுகள் இயற்கையை சுரண்டுவதால் ஏற்படும் விளைவுகளை உலகம் சந்தித்து வருகிறது என்றார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தன்று லக்னோவில் உள்ள இந்திரா காந்தி பிரதிஷ்டானில் "பஞ்சாயத்துகள்-2022" மாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலுக்கு வளர்ந்த நாடுகளின் செயல்பாடுகளைக் குற்றம் சாட்டினார். மேலும் வளர்ந்த நாடுகள் இயற்கையை சுரண்டுவதால் ஏற்படும் விளைவுகளை உலகம் முழுக்க இருக்கும் நாடுகள் எதிர்கொள்கிறது என்றார்.
பிரிட்டனின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாடு (UNFCCC) கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி நடைபெற்றது. அதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.
உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்திய பிரதமர் மோடி, 2070ம் ஆண்டுக்குள் நிகர சுழிய கரியமில வாயு வெளியேற்றம் என்ற இலக்கை எட்டுவோம் என உறுதியளித்ததாக மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் ஞாயிற்றுக்கிழமை சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் மொத்தப் பரப்பில் வெறும் 2.4% நிலத்தில் இந்தியா அமைந்துள்ளது. உலக மக்கள் தொகையில் சுமார் 18% பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். ஆனால் கார்பன் வெளியேற்றத்தில் நாட்டின் பங்களிப்பு 5% மட்டுமே என்று அமைச்சர் கூறினார்.
அந்த கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் லட்சிய இலக்கை அடைய ஐந்து அம்ச உத்தியை இந்தியா பின்பற்றுகிறது. கரிமலவாயுவின் வெளியேற்றத்தைக் குறைக்க முதல் படியாக, புதைபடிவ எரிபொருட்கள் தேவையைக் குறைப்பதாகும். அதற்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க வளங்களில் இருந்து ஆற்றலைப் பெறவேண்டும். புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து 2030க்குள் 500 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்ற இலக்கை இந்தியா கையிலெடுத்துள்ளது. அதாவது, இந்தியாவின் மின்சாரத்தேவையின் 50% ஐ பூர்த்தி செய்யும் அளவு மேம்படுத்தப்படும் என்றார். மேலும், இந்தியா 2030 வரை கார்பன் வெளியேற்றத்தை ஆண்டுக்கு ஒரு பில்லியன் டன்கள் குறைக்கும் என்று அமைச்சர் கூறினார்.
கரியமில வாயு வெளியேற்றத்தைச் சமாளிக்க அனைத்து பஞ்சாயத்துகளிலும் முருங்கை, வேம்பு போன்ற மரங்களை அதிகளவில் நட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார் . மேலும், பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலுக்கு எதிராக போராடுவதற்கான லட்சிய இலக்கை, மக்கள் பங்கேற்பால் மட்டுமே அடைய முடியும் என்றார். ஒவ்வொரு தனிமனிதனும், சுற்றுச்சூழல் பிரச்சினையை வீடுகளிலும் கிராம பஞ்சாயத்துகளிலும் விவாதிக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான 'சிறந்த பஞ்சாயத்து விருது' பூஜ்ஜிய கார்பன் இலக்கை நோக்கி உழைக்கும் கிராமத்திற்கே வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Climate change, Panchayat, Union minister