`இந்துக்கள் பொறுமை இழந்தால்...' அயோத்தி விவகாரத்தில் மத்திய அமைச்சர் கருத்து!

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

Ayodhya | அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில், ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்துத்துவ அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
அயோத்தி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி மாதத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்ததை அடுத்து, “இந்துக்கள் பொறுமை இழந்தால் என்ன நடக்கும் என்பது பயமாக உள்ளது” என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாக, அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதேபோன்று இஸ்லாமியர் தொழுகை நடத்த மசூதி அவசியமா என்பது தொடர்பான வழக்கும், நிலுவையில் இருக்கிறது. இவ்விரு வழக்குகளும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அடுத்தாண்டு ஜனவரி மாதம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும், வழக்கு விசாரணையைத் தொடர்ந்து நடத்துவது குறித்து அப்போது முடிவு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக இந்துத்துவ அமைப்புகளால் கொண்டு வரப்பட்டுள்ள செங்கற்கள்


வழக்கின் இன்றைய விசாரணை நான்கே நிமிடங்களில் முடிந்தது. இதற்கிடையே, ராமர் கோவிலை கட்டுவதற்காக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்துத்துவ அமைப்புகளும், பாஜக நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். ராமர் கோவிலுக்காக இனியும் பொறுமையாக இருக்க முடியாது” என்று விஷ்வ இந்து பரிஷித் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளார்.

“இந்துக்கள் பொறுமையிழந்து ஓடிக்கொண்டு உள்ளனர். அவர்கள் பொறுமை இழந்தால் என்ன நடக்கும் என்பது பயமாக உள்ளது” என்று மத்திய சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் கிரி ராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
Published by:Sankar
First published: