ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என அம்மாநில துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறியுள்ளது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், கோடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் 100 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், குறிப்பாக டிசம்பர் மாதம் 23 மற்றும் 24-ம் தேதிகளில் மட்டும் 10 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் ராஜஸ்தான் மாநில ஆளும் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடியை எழுப்பியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், குழந்தைகள் உயிரிழந்த மருத்துவமனையில், மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவமனையின் உள்கட்டமைப்பு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். இதனிடையே, மக்களவை சபாநாயகரும், கோடா மக்களவை தொகுதி உறுப்பினருமான ஓம் பிர்லா, உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ வசதிகளை மேம்படுத்துமாறு ராஜஸ்தான் முதலமைச்சருக்கு தான் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார்.
குழந்தைகள் உயிரிழப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், 13 மாதங்கள் ஆட்சியில் இருந்த பிறகு, முந்தைய அரசை குறைகூறிக் கொண்டிருக்க முடியாது என்றும், உரியவர்கள் நடந்த தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த கருத்து ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, அரசு மருத்துவமனகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், ராஜஸ்தானை போன்ற நிலை எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் என்றும் உத்தர பிரதேச மாநில அரசை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.