நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகமதாபாத், லக்னோ, மங்களூரு விமான நிலையங்களை நிர்வகிக்கும் பணிகளை அதானி நிறுவனத்திடம் 50 ஆண்டுகளுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Web Desk | news18
Updated: July 4, 2019, 12:45 PM IST
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மோடி
Web Desk | news18
Updated: July 4, 2019, 12:45 PM IST
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 65 ரூபாய் அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், சோயாபீன்ஸ்க்கான குறைந்தபட்ச ஆதார விலை 311 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவில் 50 சதவீதம் அளவுக்கு வருவாய் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் அடிப்படையில், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி, நடப்பு ஆண்டின் குறுவைப் பருவத்தில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 65 ரூபாய் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில், சாதா ரக நெல்லின் ஆதார விலை 1,750 ரூபாயிலிருந்து 1, 815 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல, முதல் தர நெல்லின் விலை 1,835 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சோளத்துக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு 120 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. கேழ்வரகுக்கு 253 ரூபாயும், கம்புக்கு 50 ரூபாயும் அதிகரித்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோளத்துக்கு 60 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சோயாபீன்ஸுக்கான ஆதார விலை 311 ரூபாய் உயர்த்தப்பட்டு, ஆதார விலை 3,710 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துவரம் பருப்புக்கு 125 ரூபாயும், பச்சைப்பயிறுக்கு 75 ரூபாயும், உளுந்துக்கு 100 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலை 105 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகமதாபாத், லக்னோ, மங்களூரு விமான நிலையங்களை நிர்வகிக்கும் பணிகளை அதானி நிறுவனத்திடம் 50 ஆண்டுகளுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதேபோல, கொச்சி நகரிலிருந்து மாலத்தீவில் உள்ள மாலே மற்றும் குல்குதுஃபுஷி நகரங்களுக்கு கடல் வழியாக பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ள இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மேலும் படிக்க... ஹெல்மெட் இல்லாமல் வந்த வாகன ஓட்டி... தடுத்த போலீசாரை ஒருமையில் திட்டி வக்குவாதம்





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...