வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது மற்றும் முதல் முறை வாக்காளர்கள் சேர்க்கையை எளிதாக்குவது உள்ளிட்ட சில முக்கிய தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி முதல் முறை வாக்காளர்களின் பெயரை பட்டியலில் சேர்க்க ஒரு ஆண்டுக்கு நான்கு முறை அனுமதிக்கப்படும். தற்போது 18 வயது நிரம்பியவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்கு முன் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும். ஆனால் புதிய விதிகளின்படி ஆண்டுக்கு நான்கு முறை வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க முடியும்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 6 ஆண்டுகளுக்கு செமிகண்டக்டர் சிப் மற்றும் அதனைச் சார்ந்த உதிரி பாகங்களை தயாரிக்க 76 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாக்கூர், அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் கஜேந்திர சிங் செகாவத் ஆகியோர் விளக்கமளித்தனர்.
அப்போது செமிகண்டக்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்திக்கான சூழல் அமைப்பை இந்தியாவில் மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் ரூபே உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகை வழங்குவதற்கு ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் கூறினர்.
Must Read : தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான்: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு
அதேபோல 2021-26 பிரதமரின் க்ரிஷி சிஞ்சாயி யோஜனாவை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இதன் மூலம் சுமார் 22 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.