நிதி நெருக்கடியில் பி.எஸ்.என்.எல்; விருப்ப ஓய்வு கோரிய 90 ஆயிரம் ஊழியர்கள்! காரணம் என்ன?

நிதி நெருக்கடியில் பி.எஸ்.என்.எல்; விருப்ப ஓய்வு கோரிய 90 ஆயிரம் ஊழியர்கள்! காரணம் என்ன?
  • News18
  • Last Updated: November 28, 2019, 10:55 PM IST
  • Share this:
நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை சேர்ந்த 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளனர்.

நாட்டின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் மொத்த கடன் சுமை 40 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. இந்த நிறுவனங்களை மீட்டெடுக்க 74 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கும்படி தொலைதொடர்புதுறை சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிதியமைச்சகம் ஏற்க மறுத்துவிட்டது. இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் தள்ளாடி வருகின்றன.

வருவாயில் பெரும்பகுதி ஊழியர்களின் சம்பளத்திற்கே சென்றுவிடுவதால் இந்நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களை விருப்ப ஓய்வூதிய திட்டத்தின் மூலம் வீட்டிற்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு மத்திய அரசு 17 ஆயிரத்து 160 கோடி ரூபாயை வழங்க இருக்கிறது. ஓய்வு கால செட்டில்மெண்ட்களுக்கு 12 ஆயிரத்து 768 கோடி ரூபாயைக் கொடுக்க இருக்கிறது.


அதன்படி, பணிபுரிந்த ஆண்டுகளில் ஓராண்டுக்கு 35 நாட்கள் ஊதியம் வீதமும், ஓய்வு பெறுவதற்கு மீதமுள்ள ஆண்டுகளில் ஓராண்டுக்கு 25 நாட்கள் ஊதியம் வீதமும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பல மாதங்களாக ஊதியத்தை தாமதமாக பெற்று வரும் இந்நிறுவன ஊழியர்கள் பணி உத்தரவாதம் இன்றி அச்சத்தில் இருந்து வந்த நிலையில், இந்த அறிவிப்பை கேட்டு போட்டி போட்டுக் கொண்டு விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

ஒரு லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்களைக் கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இதுவரை 80 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளனர். எம்டிஎன்எல்லில் 22 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், 14 ஆயிரம் ஊழியர்கள் விஆர் எஸ் திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பிப்பதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளதால் இந்த இரு நிறுவனங்களிலும் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.அவர்களது மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் இந்த திட்டம் ஜனவரி 31-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகளவில் ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவதன் மூலம் இந்த இரு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சி நடைபெறக் கூடும் என்று தொழிற்சங்கத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்கவும், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது கவனிக்கத்தக்கது.

Also see:


 
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்