152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 124 ஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதியவும் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தேச துரோக சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்கள் ஜாமீன் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
ஆங்கிலேயே காலனிய ஆட்சியின்போது அரசுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் விதமாக தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டன. நாடு விடுதலை பெற்ற பின்னரும் காலனிய சட்டமான தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது 124A சட்டப்பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, காலனியத்துவ தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவான 124A-ஐ ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.
தேச துரோக சட்டத்துக்கு தடைகோரி எடிட்டர்ஸ் கில்டு, பத்திரிக்கையாளர் அருண் சோரி, எம்பி மௌவா மைத்ரா, பி.யு.சி.எல் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இதையும் படிங்க: அசாமில் ஆயுத படை சட்டம் முழுமையாக நீக்கப்படும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசும் மாநில அரசுகளும் தேச விரோத சட்டத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த தலைமை நீதிபதி அமர்வு, அதனையும் மீறி ஏதேனும் வழக்குகள் எங்காவது பதிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது. இதுதொடர்புடைய வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் படிக்க: 87ஆவது வயதில் 10வது பாஸ் செய்த முன்னாள் முதலமைச்சர்
இந்த சட்டத்தை பயன்படுத்தாமல் இருக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு கூடுதல் ஆலோசனைகளை வழங்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 13 ஆயிரம் பேர் நீதிமன்றங்கள் மூலம் ஜாமின் பெற்றுக்கொள்ளவும் உச்சநீதிமனறம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Law, Supreme Court Cheif Justice