2021-22-ஆம் நிதியாண்டில் அரசு நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் பங்குகளை ரூ.1.75 லட்சம் கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதில் எல்ஐசியின் பங்குகள் விற்பனை மற்றும் இரு வங்கிகளின் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 9-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து பேசுகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது அறிவிப்பில், ''2021-22-ஆம் நிதியாண்டில் அரசு நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் பங்குகளை ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கு விற்பனை செய்து நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ஒரு காப்பீடு நிறுவனம், இரு வங்கிகளின் பங்குகளும் அடங்கும்.
குறிப்பாக ஐடிபிஐ வங்கி, பிபிசிஎல், ஷிப்பிங் கார்ப்பரேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன், நீலாச்சல் இஸ்பத் நிகம் உள்ளிட்ட நிறுவனங்கள் 2021-22-ஆம் நிதியாண்டு தொடக்கத்தில் விற்பனை செய்யப்பட்டுவிடும்.
எல்ஐசி காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும். நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 2020-25-ஆம் ஆண்டுவரை ரூ.111 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை உருவாக்குவதற்காக ரூ.20,000 கோடியில் மேம்பாட்டு நிதிக் கழகம் (டிஎப்ஐ) உருவாக்கப்படும்''எனத் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து, ரூ.2.10 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ரூ.1.20 லட்சம் கோடி பொதுத்துறை நிறுவனங்களையும், ரூ.90,000 கோடி வங்கிப் பங்குகளை விற்கவும் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், நிதியாண்டில் ரூ.19,499 கோடி மட்டுமே பங்குகள் விற்பனையில் அரசுக்குக் கிடைத்துள்ளது.