இங்கிலாந்து மக்கள் அடுத்த வாரம் முதல் முகக்கவசம் அணிய தேவையில்லை என அறிவித்துள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றான இங்கிலாந்தில், ஓமைக்ரான் வகை பரவல் கடந்த ஆண்டு இறுதியில் வேகமெடுத்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல் அங்கு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மக்கள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும், வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையில்லை, இரவு நேர விடுதிகள் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு அவசியமாக்கப்பட்டிருந்த கோவிட் பாஸ்கள் இனி தேவையில்லை, அதே போல கட்டாய தடுப்பூசி சான்றிதழ்களும் இனி தேவைப்படாது என போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார்.
Also read: சீன ராணுவத்தால் அருணாச்சல பிரதேச சிறுவன் கடத்தல்
நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது, “கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படும். பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றதன் பலனாக இது சாத்தியமாகி இருக்கிறது. இதுவரை 36 மில்லியன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 60 வயதிற்கு மேற்பட்ட 90 சதவிகிதம் பேருக்கு மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சாதனை அளவில் சென்றுகொண்டிருந்த தினசரி கொரோனா பாதிப்புகளும் தற்போது குறையத்துவங்கியுள்ளன
ஓமைக்ரான் அலை தற்போது தேசிய அளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக நமது விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஒவ்வொருவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் என்று நமக்குத் தெரிந்த அனைத்து எச்சரிக்கையான நடவடிக்கைகளையும் நாடு முழுவதும் உள்ள அனைவரையும் தொடருமாறு நான் ஊக்குவிக்கிறேன்.
Also read: மகளிடம் பேசிய திருமணமான இளைஞரை கொலை செய்த பக்கத்து வீட்டு குடும்பத்தினர்
நம்முடைய சமூகத்தில் பெரும்பாலானோருக்கு புஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதால், இங்கிலாந்து ‘பிளான் பி’-ல் இருந்து மீண்டும் ‘பிளான் ஏ’-வுக்கு அடுத்த வார வியாழன் முதல் திரும்புகிறது.
முன்னதாக பிரதமர் இல்லத்தில் லாக்டவுனில் விதிமீறி விருந்து நிகழ்ச்சி நடத்திய விவகாரத்தில் சிக்கிய போரிஸ் ஜான்சன் பதவியை இழக்கக் கூடும் என கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் இருந்து தப்பவே போரிஸ் ஜான்சன் கொரோனா விதிமுறைகளை நீக்கியிருப்பதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.