• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • கங்கை கரையில் புதைக்கப்பட்ட உடல்களின் மேல் சுற்றப்பட்ட காவித்துணி அகற்றம்- யோகி ஆதித்யநாத் அரசு மீது கடும் விமர்சனம்

கங்கை கரையில் புதைக்கப்பட்ட உடல்களின் மேல் சுற்றப்பட்ட காவித்துணி அகற்றம்- யோகி ஆதித்யநாத் அரசு மீது கடும் விமர்சனம்

யோகி ஆதித்யநாத்.

யோகி ஆதித்யநாத்.

கங்கை கரைகளில் புதைக்கப்பட்ட உடல்களில் சுற்றப்பட்டிருந்த காவிநிறத் துணியை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். இதன் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 • Share this:
  இதனையடுத்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உ.பி.யின் இந்துக்களில் இறந்தவர்களின் உடல்களை புதைக்கும் சமூகப் பிரிவினர்களும் உண்டு. இந்த உடல்களுடன் கொரோனாவால் பலியானவர்களும் புதைக்கப்பட்டதால் அதன் எண்ணிக்கை மிகவும் அதிகமாகத் தெரிவது, உ.பி. அரசிற்கு சிக்கலாகி விட்டது.

  கொரோனா பலிகள் அதிகமானதால் இறுதி சடங்குகளை உறவினர்களால் முறையாக செய்ய முடியவில்லை. இதனால், சடலங்களை கங்கை நதியில் வீசுவதும், அதன் கரைகளில் புதைப்பதும் நடைபெற்றன.

  இந்த செய்திகள் வெளியாகி சர்ச்சையானதால், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் அதுபோன்ற செயல்கள் தடுக்கப்படுகிறது. இவை வாரணாசி, அலகாபாத், கான்பூர், உன்னாவ் மற்றும் பலியா ஆகிய நகரங்களின் கங்கை கரைகளில் அதிகமாகப் புதைக்கப்பட்டன.

  இதனைத் தடுக்க பீகார் அரசு மீன்களை வலை வீசிப் பிடிப்பது போல் பிணங்களையும் பிடிக்க பெரிய வலையை உ.பி.-பீகார் எல்லையில் கங்கை நதியில் விரித்தது.

  ஓரிரு அடிகள் ஆழத்தில் புதைக்கப்பட்ட சடலங்கள் சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் வீசியக் காற்றாலும் வெளியில் தெரியத் துவங்கின. இதை மறைக்க, அந்த உடல்களில் சுற்றப்பட்டக் காவி அல்லது மஞ்சள் நிறத்துணிகளை அகற்ற பணியாளர்களை அம்மாவட்ட நகராட்சிகள் அமர்த்தியுள்ளனர்.

  இவர்கள் புதைக்கப்பட்டவர்களின் தலைப்பகுதியில் அடையாளத்திற்கு வைக்கப்படும் மூங்கில்களையும் பிடுங்குகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் செய்யப்படும் இதன் படக்காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  உடலில் சுற்றப்படும் துணிகளில் ‘ராம் ராம்’ என்ற எழுத்துக்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த துணியை ‘ராம்நாமி’ என இந்தியில் அழைக்கிறார்கள். இதை குறிப்பிட்டு முதல்வர் யோகியை உ.பி.யின் எதிர்கட்சிகள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

  இது குறித்து காங்கிரஸின் தேசியப் பொதுச்செயலாளரும் உ.பி. மாநிலப் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி வாத்ரா கூறும்போது, ‘‘இவர்கள் உயிருடன் இருந்த போது தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை.

  இதில் பெரும்பாலனவர்களுக்கு உகந்த மரியாதையுடனான இறுதிச்சடங்குகளும் செய்யப்படவில்லை. அரசு பதிவேட்டிலும் அவர்கள் இறப்பு பதிவாகவில்லை. இப்போது, அவர்களது ராம்நாமி துணியும் பிடுங்கப்படுகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

  ராம்நாமி அகற்றலை கண்டித்து உ.பி.யின் முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதியினர் அலகாபாத்தின் கங்கை நதியில் நின்று ஆர்பாட்டம் செய்கின்றனர். மாநில துணைத் தலைவரான சந்தீப் யாதவ் தலைமையில் இறந்த உடல்களை உ.பி. அரசு அவமதிப்பதாகக் கோஷம் எழுப்பினர்.

  இவர்கள் மீது ஊரடங்கை மீறியதாக தொற்று சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த போராட்டம் உ.பி.யின் வேறு சில நகரங்களிலும் தொடர்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: